வந்தாச்சு நல்ல செய்தி.! "இது" மட்டும் நடந்தால் தங்கம் விலை பட்டுனு விழும்.. குறைய வாய்ப்பு அதிகமாம்!
மும்பை: தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் சூழலில், அது எப்போது குறையும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கம் விலை உயர்வுக்கான புவிசார் அரசியல் காரணங்களை விளக்கியுள்ள வல்லுநர்கள், நிலைமை எப்படி சீராகி வருகிறது.. வரும் காலத்தில் தங்கம் விலை எந்தளவுக்குக் குறையும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிக்க முதல் சாய்ஸாக எப்போதும் இருப்பது தங்கம் தான். ஆனால், சமீப காலமாகவே தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வரும் சூழலில் மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கம் விற்கும் விலையில் மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை யோசித்தே வாங்கும் சூழல் இருக்கிறது.

தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் (மார்ச் 23) 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8978க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தங்கம் விலை இதுபோல எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்கும் எனச் சொல்ல முடியாது.
தங்கம் என்பது கிட்டதட்ட ஒரு சர்வதேச கரன்சியை போன்றது. உலகளவில் நடைபெறும் புவிசார் மாற்றங்களைப் பொறுத்தும் கூட தங்கம் விலை பெரியளவில் மாறுபடும். இதற்கிடையே உக்ரைன் அமெரிக்கா இடையே போர் முடிவுக்கு வரலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அது நடந்தால் தங்கம் விலை கணிசமாகக் குறையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
தங்கம் விலை குறையுமாம்
இது தொடர்பாகப் பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் கூறுகையில், "இப்போது தங்கம் விலை $300-400 டாலர் வரை அதிகமாக இருக்கிறது. சர்வதேச அளவில் புவிசார் மாற்றங்களை நாம் கவனிக்க வேண்டும். உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்பினால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் தங்கம் விலை அதே அளவில் உச்சத்தில் நீண்ட காலம் இருக்க முடியாது. குறைந்தே தீரும். புவிசார் சூழல்கள் சரியாகி விலை குறையும். ஆனால் அது எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாது" என்றார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக வல்லுநர் குனால் ஷா கூறுகையில், "குறிப்பாக ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றே நினைக்கிறேன். இப்போது நிலவும் சர்வதேச அழுத்தத்தை ரஷ்யாவால் தாங்க முடியாது. ஏற்கனவே 3 ஆண்டுகளாகத் தொடரும் போரால் ரஷ்யா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இறங்கி வர வாய்ப்புகள் அதிகம். அது தங்கம் விலை குறையக் காரணமாக அமையும். எல்லாம் சரியாக நடந்தால் தங்கம் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
உலகில் பதற்றமான சூழல் ஏற்படும்போதெல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும். ஆபத்தான காலங்களில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாது என்பதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டையே தேடுவார்கள். அதன்படி தங்கத்தில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுவார்கள். இதனால் போர், பஞ்சம், பெருந்தொற்று உள்ளிட்ட காலங்களில் தங்கம் விலை அதிகரிக்கும்.
புவிசார் அரசியல்
கொரோனா சமயத்தில் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா மெல்லக் கட்டுக்குள் வந்தபோது, 3 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. இதுவே தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணம். மத்திய கிழக்கில் இஸ்ரேலைச் சுற்றிக் கடந்த 1.5 ஆண்டுகளாக நடக்கும் சம்பவங்களும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார சூழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவையும் கூட தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் பிரதான காரணம் இப்போது புவிசார் அரசியலும் டாலர் மதிப்பும் தான்.
இந்தச் சூழலில் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அங்கு அமைதி திரும்பினால் தங்கம் விலை கணிசமாகக் குறையும். அப்படிக் குறையும்போது தங்கத்தை மீண்டும் வாங்கலாம் என்றும் அது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும் குனால் ஷா கூறியிருக்கிறார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications