72 மணி நேரத்திற்குள் "மூன்று" சம்பவங்கள்.. தங்கம் விலை தாறுமாறாக இருக்க இதுவே காரணம்! அடுத்து என்ன?
சென்னை: தங்கம் விலை கடந்த வாரம் சட்டென உயர்ந்திருந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9100ஐ கூட தாண்டியது. ஆனால், கடந்த இரு நாட்களாகத் தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை சட்டென குறைந்த நிலையில், இன்று லேசாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் சட்டென ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு மூன்று முக்கியமான விஷயங்களே காரணமாகச் சொல்லப்படுகிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த வாரம் தங்கம் விலை மளமளவென உயர்ந்து ஒரு கட்டத்தில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9130 (மே 8) என்ற ரேஞ்சில் விற்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்றைய தினம் தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை சரிந்தது. நேற்று காலை காலையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,040 குறைந்தது. இதன் மூலம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

குறையும் தங்கம் விலை
அதாவது சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.8,750க்கு விற்பனை செய்யப்பட்டது.. இன்றும் கூட தங்கம் விலை சரிவு தொடரும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ 120 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ 720 உயர்ந்துள்ளது. இதற்கு 3 பிரதானச் சம்பவங்கள் காரணமாகும்.
சம்பவம் 1
முதலில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான நிலவிய மோதல் முடிவுக்கு வந்தது. கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. இந்தியா மீது அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவே.. அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலையும் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாகவே கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயராமல் இருந்தாலும் இந்தியாவில் கணிசமாக உயர்ந்தது.
முதலீட்டாளர்கள் எப்போதும் போர் இல்லாத அமைதியான சூழலையே விரும்புவார்கள். போர்க் காலங்களில் தங்கம் விலை உயரவே செய்யும். ரஷ்யா- உக்ரைன் மோதல், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எனப் போர் வெடித்த போதெல்லாம் தங்கம் விலை உயரவே செய்துள்ளது. அதேபோலத் தான் இந்தியா பாகிஸ்தான் மோதல் இருந்ததால் தங்கம் விலை உயர்ந்தது.
முடிவுக்கு வந்த மோதல்
இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வருவதாகக் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அதாவது இந்தியாவின் பதிலடியைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தூதுவிட்டது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இந்தியாவும் அதை ஏற்றது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் முடிந்தது. இதுவே முதல் சம்பவம்.
சம்பவம் 2
இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்து 48 மணி நேரத்தில் அதாவது நேற்று மற்றொரு முக்கிய சம்பவம் நடந்தது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்த பிறகு, அதை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், அப்போதும் அவர் சீனா மீதான வரியைக் குறைக்கவில்லை. சீனா மீதான வரியை அதிகரித்தார். பதிலுக்குச் சீனாவும் வரியை அதிகரித்தது. இரு தரப்பும் மாறி மாறி வரிகளை அதிகரித்தால் வர்த்தகப் போர் ஏற்பட்டது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா சீன அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதில் வரிகளைக் குறைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. சீனப் பொருட்களுக்கான வரிகளை 145%ல் இருந்து அமெரிக்கா 30% ஆகக் குறைக்கவுள்ளது. அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைச் சீன 125%ல் இருந்து 10%ஆகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்தனர்.
திடீர் மாற்றம்
அமெரிக்கா சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிந்தவுடனேயே ஞாயிற்றுக்கிழமையே சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. இரு தரப்பிற்கும் இடையே வர்த்தக டீல் இறுதியான உடன் சில நிமிடங்களில் சுமார் 3% வரை சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது. அதுவே இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தங்கம் விலை மேலும் குறையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
சம்பவம் 3
ஆனால், இன்று மற்றொரு மேஜர் மாற்றம் மேஜர் விஷயம் நடந்தது. அதாவது அமெரிக்காவில் டாலர் மதிப்பு திடீரெனச் சரிந்தது. பொதுவாகவே டாலர் மதிப்பு சரிந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். இதன் காரணமாகவே இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் இன்று பணவீக்கம் மற்றும் கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்டக்ஸ் டேட்டா வெளியாகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை வெளியாகும். இந்த டேட்டாவை பொறுத்தே தங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தால் தங்கம் விலை உயரும். பணவீக்கம் குறைந்தால் தங்கம் விலை குறையும். எனவே, அங்குப் பணவீக்கம் எப்படி இருக்கிறது என்பதே அடுத்து முக்கியமானதாக இருக்கிறது.
அடுத்து என்ன
சர்வதேச சந்தையில் திங்கள்கிழமை 2% க்கும் அதிகமாகச் சரிந்த தங்கம் விலை பிறகு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய தினம் கன்ஸ்யூமர் டேட்டா வெளியாகும் முன்பு ஒரு அவுன்ஸ் 0.6% உயர்ந்து $3,255.09 ஆக இருந்தது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 0.9% உயர்ந்து $3,258.40 ஆக இருந்தது. பணவீக்கம் குறித்த டேட்டா வெளியான பிறகே தங்கத்தில் ரியல் மூவ்மெண்ட் இருக்கும். அதைப் பொறுத்தே நாளை இந்தியாவிலும் தங்கம் விலை இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications