உலக சந்தையை திரும்பி பார்க்க வைக்கும் இந்திய ரூபாய்.. 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. எல்லாமே மாறுதே!
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று காலை ரூபாய் மதிப்பு மேலும் உயர்ந்தது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து, 93.70 ஆக வர்த்தகமானது. இதற்கு முந்தைய வர்த்தக நாளில் ரூபாயின் மதிப்பு 93.98 ஆக இருந்தது. ஒரே வாரத்தில் ரூபாயின் மதிப்பு 1 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால், இப்போது சில மாதங்களாக அது யூடர்ன் போட்டு உயர ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவை ரூபாயின் மதிப்பு உயர முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக ரூபாயின் மதிப்புக்கு பிரஷர் போட்டு வந்த இரு காரணங்களும் தலைகீழாக மாறி, இப்போது ரூபாய் மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது.
என்ன காரணம்?
கடந்த வாரம் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளனர். இதனால் இந்திய ரூபாய்க்கான தேவை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்கும்போது, முதலீட்டுக்கான தொகையை ரூபாயாக மாற்ற வேண்டியிருக்கும். இதனால் சந்தையில் ரூபாய்க்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயர உதவுகிறது.
கச்சா எண்ணெய்
அதேநேரம் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் சுமார் 20 சதவீதம் சரிந்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயரும்போது அதிக டாலர்களை செலவிட வேண்டியிருக்கும். இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து ரூபாயின் மதிப்பு பலவீனமடையும். மாறாக, எண்ணெய் விலை குறையும்போது இறக்குமதி செலவு குறைந்து ரூபாய்க்கு மதிப்பு உயரும்.
சர்வதேச சந்தை
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வெற்றி, தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக முதலீடுகளை பெற்ற தென் கொரியா, தைவான் ஆகிய பங்குச்சந்தைகள் சரி ஆரம்பித்துள்ளன. அதாவது அங்கு முதலீடு செய்த பணத்தை எடுத்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் சூழல் உருவாக்கியது.
அடுத்து என்ன
இருப்பினும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயருமா என கேட்டால் அதை உறுதியாக சொல்ல முடியாது. சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்தே ரூபாயின் மதிப்பு அமையும். ஆசியாவின் பெரும்பாலான கரன்சிக்கள் திங்கள்கிழமை பலவீனமடைந்தன. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு டேட்டா எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்ததால், அந்நாட்டின் மத்திய வங்கி அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.. அப்படி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரியலாம்.
எனவே இனி கச்சா எண்ணெய் விலை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், டாலர் மதிப்பு, சர்வதேச சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை பொறுத்தே ரூபாயின் மதிப்பு இருக்கும். அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து, எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் ரூபாய் மதிப்பு ஏறும்!


Click it and Unblock the Notifications
