"ரிஸ்க் தான்.." பர்சனல் லோனை முன்கூட்டியே முடிக்கலாமா? ஓ இதுல இந்த பிரச்சினைகள் வேற இருக்கா.! கவனம்
சென்னை: நாம் எதிர்பார்க்காத செலவுகளைச் சமாளிக்க சில நேரங்களில் வேறு வழியில்லாமல் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனை வாங்கியிருப்போம். அதேநேரம் கையில் பணம் வந்துவிட்டால் பலரும் பர்சனல் லோனை முன்கூட்டியே முடிக்கலாமா என்றும் யோசிப்போம். உண்மையில் இப்படி பர்சனல் லோனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா.. இல்லை அதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் செலவுகள் எப்போது எப்படி வரும் என்பதையே கணிக்க முடிவதில்லை. என்னதான் நாம் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினாலும், சில நேரங்களில் எதிர்பார்க்காத விதமாகச் செலவுகள் அதிகரித்துவிடும். அதுபோன்ற நேரங்களில் எமர்ஜென்சிக்கு நாம் லோன் வாங்குவோம். அதில் முக்கியமானது பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்.

பர்சனல் லோன்
உங்களுக்கு சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் ஈஸியாக பர்சனல் லோன் கிடைத்துவிடும். ஆனால், மற்ற வகை லோன்களை விட தனிநபர் கடன் என்பது சற்றே சிக்கலானதாகும்.. எந்தவொரு லோனாக இருந்தாலும் முன்கூட்டியே முடிப்பது நல்லதுதான் என்றாலும் பர்சனல் லோனில் சில பல ரூல்ஸ்கள் இருக்கிறது. அதை நாம் கவனமாக நோட் செய்ய வேண்டும். இல்லையென்றால் சிக்கல்தான்.
தங்க நகைக்கடன், வாகன கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கு வங்கிகள் கடன் தரும்போது அவர்களிடம் collateral இருக்கும். வங்கிகளுக்கு ரிஸ்க் குறைவு. இதனால் இதுபோன்ற கடன்களில் வட்டி விகிதம் குறைவு, திரும்பச் செலுத்தும்போது கண்டிஷன்களும் தளர்வாகவே இருக்கும். ஆனால், பர்சனல் லோன் அப்படி இல்லை.. முழுக்க முழுக்க உங்கள் சிபில் ஸ்கோரை மட்டுமே அடிப்படையாக வைத்துத் தரப்படுகிறது. இதனால் பர்சனல் லோன் எடுக்கும்போது பல விஷயங்களை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும்.

முன்கூட்டியே செலுத்துவது என்றால் என்ன
சரி, விஷயத்திற்கு வருவோம். முதலில் லோனை pre-closure செய்வது என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பொதுவாக லோன் தொகையை நாம் குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்ட வேண்டும். ஆனால், முழு தொகையையும் முன்கூட்டியே செலுத்தி கடனை க்ளோஸ் செய்வதுதான் pre-closure ஆகும். கைவசம் பணம் வந்துவிட்டால், நாம் முன்கூட்டியே லோனுக்கு பணத்தைச் செலுத்தலாம். இதன் மூலம் லோனையும் முன்கூட்டியே முடிக்க முடியும்
இப்படி முன்கூட்டியே செலுத்தும்போது வட்டி தொகையை நாம் சேமிப்போம். மேலும், முன்கூட்டியே கடனை முடிப்பது நமது கிரெடிட் ஸ்கோரையும் மேம்படுத்த உதவும். இதனால் எதிர்காலத்தில் கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும். இப்படி சில நன்மைகள் இருக்கும் அதேநேரம் சில பிரச்சினைகளும் உள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நன்மைகள் என்ன
வட்டியில் சேமிப்பு: பர்சனல் லோனை முன்கூட்டியே கட்டும்போது வட்டி தொகையில் பெருமளவு குறைக்கலாம். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே பணத்தைச் செலுத்துகிறீர்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் செலுத்தும் வட்டி தொகை குறைவாக இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்: கடனை முன்கூட்டியே அடைப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்.. கடனை முன்கூட்டியே செலுத்துவது ஒரு நல்ல நடைமுறை என்பதால் கிரெடிட் ஸ்கோர் உயரும்.
நிதி சுதந்திரம்: கடன் என்பது ஒரு liability. உங்களுக்குச் சம்பளம் மாதாமாதம் வருகிறதோ இல்லையோ.. கடனை கட்டியே தீர வேண்டும். அப்படியிருக்கும்போது நீங்கள் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும்போது அது நம்மை ஈஎம்ஐ சுமையிலிருந்து விடுவிக்கிறது. இது உங்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும்.

சிக்கல்கள் என்ன
முதலில் Pre-closure charges எனப்படும் தனி கட்டணங்கள்.. லோனை முன்கூட்டியே செலுத்தும்போது தனியாக Pre-closure charges செலுத்த வேண்டும். இது லோன் ஆவணத்தில் தெளிவாக இருக்கும். நாம் செலுத்த வேண்டிய மொத்த கடனில் 2% முதல் 6% வரை Pre-closure chargesஆகச் செலுத்த வேண்டும். இது பல நேரங்களில் நாம் வட்டியில் மிச்சப்படுத்தும் தொகைக்கு இணையாக இருந்துவிடும்.
நாம் ஒரே நேரத்தில் இங்குப் பணம் செலுத்துவதற்குப் பதிலாக வேறு இடத்தில் முதலீடு செய்யலாம். உதாரணமாகப் பங்குச்சந்தைகள், மியூச்சுவல் பண்டு, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதில் கிடைக்கும் வருமானம் என்பது Pre-closure chargesஐ விட அதிகமாக இருந்தால் நீங்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தாமல் இருப்பதே நல்லது. முதலீடு செய்துவிட்டு வழக்கம் போல ஈஎம்ஐ தொடர்ந்து கட்டினாலே லாபகரமாக இருக்கும்.
பணப்புழக்கம் குறையும். ஒரே நேரத்தில் பெரிய தொகையைச் செலுத்தும்போது கையில் பணம் இருக்காது. பணப்புழக்கம் குறையும். இதுபோல பணம் கையில் குறைவாக இருக்கும்போது திடீரென எமர்ஜென்சி ஏற்பட்டால் மீண்டும் கடன் வாங்கும் சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம். இதுவே நம்மைக் கடன் சுழலில் சிக்க வைக்கும்.
கடன் சுழல்
இதுபோல கடனில் சிக்காமல் இருக்க 3 எளிமையான டிப்ஸ்கள் இருக்கின்றன. அதை நாம் சரியாகப் பின்பற்றினாலே போதும் கடன் சுழலில் சிக்க மாட்டோம். முதலில் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். வருமானம் மற்றும் செலவுகள் குறித்து அலட்சியமாக இருந்து பட்ஜெட் போடாமல் விட்டால் பணம் எப்படிப் போகிறது என்றே தெரியாது. பிறகு மாத கடைசியில் கடன் வாங்க வேண்டி இருக்கும். இதில் ஒரு முறை நாம் கடனில் சிக்கிவிட்டாலே வெளியே வருவது கடினம்.
கவனிக்க வேண்டியது
அடுத்து முக்கியமாகச் சிறு செலவுகளையும் கவனிக்க வேண்டும். பெரும்பாலானோர் செய்யும் தவறு இதுதான். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் காபி, டீ எனச் சின்ன சின்ன செலவுகளை மிஸ் செய்துவிடுவோம். ஆனால், ஒரு மாதத்திற்கு இதுபோல சிறிய செலவுகளைச் சேர்த்தால் அதுவே பட்ஜெட்டில் ஒரு பெரிய தொகையாக இருக்கும். எனவே, சிறிய செலவுகளை முக்கியமா கவனிக்க வேண்டும்.
இதுதான் ரொம்ப முக்கியம்
முன்பே குறிப்பிட்டது போல எமர்ஜென்சி காலங்களில் பணம் இல்லாமல் போவது தான் கடன் வாங்க முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே, எதிர்பார்க்காத நேரங்களில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க எமர்ஜென்சி தொகையைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்களின் 6 மாத சம்பளம் எமர்ஜென்சி தொகையாக இருக்க வேண்டும். மேலும், ஒருபோதும் உங்கள் சேமிப்பை எமர்ஜென்சி தொகையாகக் கருத வேண்டாம். சேமிப்பு தனி எமர்ஜென்சி தொகை தனி என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications