கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை பேமெண்ட்.. மீண்டும் வருகிறது.. போன்பே, கிரெட் அறிமுகம்!
கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தி வந்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரு முக்கியமான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் பல முன்னணி வங்கிகள் கிரெடிட் கார்டு வாயிலாக வீட்டு வாடகை செலுத்தும் போது கொடுத்து வந்த கேஷ்பேக், ரிவார்ட் பாயின்ட்களை நிறுத்தியது. இதை தொடர்ந்து PhonePe, Paytm, Mobikwik, Freecharge, Amazon Pay ஆகியவை இச்சேவையை நிறுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி நிதி சேவை நிறுவனங்களான போன்பே (PhonePe) மற்றும் கிரெட் (CRED) ஆகியவை தங்களின் செயலிகள் மூலம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் வீட்டு வாடகை செலுத்தும் வசதியைச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளன.

இந்த முறை எவ்விதமான விதிமுறை மீறல் பிரச்சனையும் இருக்க கூடாது என்பதற்காக 'மார்க்கெட்பிளேஸ் பிளாட்ஃபார்ம் மாடல்' (Marketplace Platform Model) எனப்படும் புதிய சந்தை வடிவத்தின் கீழ் இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த புதிய சேவை அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் அதிரடி
இதற்கு முன்பு, போன்பே, கிரெட் மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி மிக பிரபலமாக இருந்தது. ஆனால், கிரெடிட் கார்டுகள் என்பவை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கும், பதிவு செய்யப்பட்ட வணிகர்களுக்கும் இடையேயான பரிமாற்றங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை ஆகும்.
பலர் தங்களின் வழக்கமான தனிநபர் பணப்பரிமாற்றங்களை வீட்டு வாடகை என்ற பெயரில் கிரெடிட் கார்டு வழியாக மாற்றி வந்தனர். இதனால் நிதி விதிமுறைகளில் பெரும் சிக்கல்கள் எழுந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று இந்திய ரிசர்வ் வங்கி தனது பேமெண்ட் அக்ரிகேட்டர் மற்றும் பேமெண்ட் கேட்வே விதிமுறைகளைக் கடுமையானதாக்கியது.
person-to-person அடிப்படையில் கிரெடிட் கார்டு வாயிலாக பணத்தைச் செலுத்தக் கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து போன்பே, கிரெட் நிறுவனங்கள் இந்தச் சேவையை நிறுத்தின. இந்தச் சேவை முடங்கியதால் போன்பே நிறுவனம் மட்டும் சுமார் 1,250 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்ததாகத் தனது ஐபிஓ ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
புதிய 'மார்க்கெட்பிளேஸ் மாடல்' எப்படிச் செயல்படும்?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை நூறு சதவீதம் பின்பற்றும் வகையில், தற்போது போன்பே மற்றும் கிரெட் நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடைமுறைகளை அடியோடு மாற்றியமைத்துள்ளன.
இந்த புதிய மார்க்கெட்பிளேஸ் மாதிரியின் கீழ், இனி வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் சாதாரண தனிநபர்களாகக் கருதப்படாமல் வணிகர்களாக மாற்றப்படுவார்கள். இதன் காரணமாக, வீட்டு ஓனர்கள் இனி வணிகர் கேஒய்சி (KYC) விதிமுறைகளின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
இனி கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களின் பான் கார்டு விவரங்களுடன், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு விவரங்கள் மற்றும் முறையான வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரங்களையும் செயலியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அனுப்பப்படும் பணம் உண்மையாகவே வீட்டு வாடகைக்குத் தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பேமெண்ட் நிறுவனங்கள் துல்லியமாக உறுதி செய்ய முடியும்.
மற்ற நிறுவனங்களின் நிலைப்பாடு
ஜனவரி மாதத்தில், ரெட்ஜிராஃப், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பேஜேப் மற்றும் நோபுரோக்கர் போன்ற சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு ஏற்ப தங்களின் தொழில்நுட்ப முறைகளை மாற்றி அமைத்து, இந்த கிரெடிட் கார்டு வாடகை சேவையைத் தொடர்ந்து வழங்கி வந்தன.
ஆனால், பங்குச்சந்தை ஐபிஓ-விற்குத் தயாராகி வரும் போன்பே நிறுவனம் எவ்வித ஒழுங்குமுறைச் சிக்கல்களும் வரக்கூடாது என்பதற்காக இந்தச் சேவையை நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்தது.
அதே வேளையில், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் பரிமாற்றங்களின் மதிப்பு மிக அதிகமாக இருந்ததால், அவற்றுக்கான சலுகைகளைத் தொடர முடியாமல் வங்கிகள் தவித்தன. இதன் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துபவர்களுக்கான ரிவார்டு புள்ளிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை முழுமையாகப் பின்வாங்கிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு மூலம் வாடகை (Rent) செலுத்துவதில் உள்ள நன்மைகள் (Pros) மற்றும் தீமைகளை (Cons) என்ன?
நன்மைகள் (Pros):
அவசர பண உதவி: கையில் பணம் இல்லாத சூழலில், மாத தொடக்கத்தில் வாடகையைச் செலுத்த இது ஒரு தற்காலிக நிதி ஆதாரமாக உதவும்.
பண சுழற்சி (Cash Flow): சம்பளம் வருவதற்கு முன்பே வாடகை செலுத்திவிட்டு, கிரெடிட் கார்டுக்கான தொகையை 45 முதல் 50 நாட்கள் கழித்து செலுத்தலாம்.
ரிவார்டு புள்ளிகள் (Reward Points): பெரிய தொகையை கார்டு மூலம் செலுத்துவதால் அதிக ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் அல்லது ஏர் மைல்கள் (Air Miles) கிடைக்கும்.
மைல்கல் சலுகைகள் (Milestone Benefits): ஆண்டுக்கு இவ்வளவு செலவு செய்தால் கார்டு கட்டணம் தள்ளுபடி (Fee Waiver) போன்ற சலுகைகளை எளிதில் பெறலாம்.
கிரெடிட் ஸ்கோர் (Credit Score): வாடகைத் தொகையை கார்டில் செலுத்திவிட்டு, அதற்கான பில்லை உரிய நேரத்தில் சரியாக கட்டினால் சிபில் (CIBIL) ஸ்கோர் உயரும்.
தீமைகள் (Cons):
கூடுதல் கட்டணங்கள் (Convenience Fees): Cred, NoBroker போன்ற ஆப்ஸ் மற்றும் வங்கிகள் 1% முதல் 3% வரை சேவை கட்டணம் (Convenience Fee) மற்றும் ஜிஎஸ்டி (GST) வசூலிக்கும்.
வட்டி மற்றும் அபராதம்: கிரெடிட் கார்டு பில்லை உரிய தேதிக்குள் கட்டத் தவறினால், 36% முதல் 42% வரை மிக அதிக வட்டி விதிக்கப்படும்.
ரிவார்டு புள்ளிகள் குறைப்பு: தற்போது பல வங்கிகள் வாடகை செலுத்துவதற்கு ரிவார்டு புள்ளிகளை வழங்குவதை நிறுத்திவிட்டன அல்லது குறைத்துவிட்டன.
கடன் சுமை (Debt Trap): வாடகை என்பது ஒவ்வொரு மாதமும் வரும் கட்டாயச் செலவு. கார்டு பில்லை சரியான நேரத்தில் கட்ட முடியாவிட்டால், அது உங்களை பெரும் கடன் சுமையில் தள்ளிவிடும்.
கிரெடிட் பயன்பாட்டு விகிதம் (Credit Utilization Ratio): வாடகைத் தொகையால் உங்கள் கார்டின் மொத்த லிமிட்டில் 30%-க்கும் அதிகமாக செலவானால், அது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கலாம்.












Click it and Unblock the Notifications