உலகின் சக்திவாய்ந்த கரன்சி எது தெரியுமா? டாப் 5ல் கூட டாலர் இல்லை.. முதல் மூன்றுமே பெரிய சர்ப்ரைஸ்
மும்பை: உலகின் வலிமையான கரன்சி எது என்று கேட்டால் நம்மில் பலரும் டாலர் என்றே சொல்வோம். ஆனால், உண்மையில் வலிமையான கரன்சிக்களில் டாப் 5ல் கூட டாலர் இல்லை என்பதே உண்மை. டாலர் இல்லை என்றால் அப்போ உலகின் வலிமையான கரன்சி எது.. இந்த லிஸ்டில் டாலர் எங்கே இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்த காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக நாம் ஒரு நாட்டில் இருந்து பொருட்கள் அல்லது சர்வீஸை வாங்கும் போது அமெரிக்க டாலராகவே பணம் தருவோம்.

சக்திவாய்ந்த கரன்சி
உலகின் எல்லா நாடுகளும் டாலர் மூலமே வர்த்தகம் செய்கிறது. சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே வெளிநாட்டுப் பயணங்களின் போது, நாம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் டாலரை எடுத்துச் செல்லவே அறிவுறுத்துவார்கள். கையில் டாலர் இருந்தால் எந்தவொரு நாட்டிலும் அதைக் கொடுத்து உள்ளூர் கரன்சியை வாங்கிக் கொள்ளலாம் என்பதே அதற்குக் காரணமாகும்.
இதனால் நம்மில் பலரும் கூட உலகின் வலிமையான கரன்சி நிச்சயம் டாலராகவே இருக்கும் என்றே நினைத்து இருப்போம். என்ன தான் அமெரிக்க டாலர் சர்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் செல்வாக்குமிக்க உலகளாவிய நாணயமாக இருந்தாலும், அது உலகின் வலிமையான கரன்சி இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா... சொல்லப்போனால் டாப் 5ல் கூட டாலர் வருவதில்லை.. எக்ஸ்சேஞ்ச் ரேட்டை எடுத்துப் பார்த்தோம் என்றால் டாலரை விடப் பல கரன்சிக்கள் வலிமையாக இருப்பது நமக்குத் தெரியும்.
எதன் அடிப்படையில் முடிவாகும்
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, வர்த்தக இருப்பு மற்றும் பணக் கொள்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே ஒரு கரன்சி எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே வலிமையான பல கரன்சிகள் சிறிய மற்றும் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
சிறிய நாடாக இருந்தாலும் அவை எண்ணெய் வளத்தைப் பெருமளவு கட்டுப்படுத்துவதாலேயே அதன் கரன்சிக்கள் வலிமையாக இருக்கிறது. ஜனவரி மாத டேட்டாவின்படி, உலகின் டாப் 10 சக்திவாய்ந்த கரன்சி குறித்து நாம் பார்க்கலாம். மேலும், அதை வாங்க நாம் இந்திய ரூபாயில் எவ்வளவு தர வேண்டும் என்பதையும் பார்க்கலாம். உதாரணமாக, உலகில் வலிமையான கரன்சியான குவைத் தினார் ஒன்றை வாங்க நாம் 280 ரூபாய் தர வேண்டும்.
சக்திவாய்ந்த கரன்சிக்கள்
குவைத் தினார் (குவைத்)- 280.98
பஹ்ரைன் தினார் (பஹ்ரைன்)- 230.10
ஓமானி ரியால் (ஓமன்)- 225.22
ஜோர்டானிய தினார் (ஜோர்டன்)- 122.25
ஜிப்ரால்டர் பவுண்ட் (ஜிப்ரால்டர்)- 109.63
பிரிட்டிஷ் பவுண்டு (பிரிட்டன்)- 109.63
கேமன் தீவு டாலர் (கேமன் தீவுகள்)- 104.54
சுவிஸ் பிராங்க் (சுவிட்சர்லாந்து)- 96.49
யூரோ (ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகள்)- 90.78
அமெரிக்க டாலர் (அமெரிக்கா)- 86.71
காரணங்கள் என்ன?
குவைத்தை பொறுத்தவரை அதன் வலிமையான ஜிடிபி மற்றும் அதிகளவில் உள்ள எண்ணெய் வளமே அது டாப் இடத்தில் இருக்கக் காரணமாகும். மேலும், நிலையான பொருளாதாரம், குறைந்த பணவீக்கமும் கூட தினார் வலிமையாக இருக்கக் காரணமாகும். மற்றொரு மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பஹ்ரைனிடம் எண்ணெய் வளம் இல்லை என்றாலும் அதன் வலிமையான நிதித்துறை மற்றும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி அமைப்பும் இரண்டாம் இடம் பெற உதவுகிறது.
ஓமான் அரசு அதன் நாணய புழக்கத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இந்த கடுமையான நிதிக் கொள்கைகளே அது மூன்றாம் இடத்தில் இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்து வருகிறது ஜோர்டான். மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் போல இல்லாமல், ஜோர்டானிடம் எண்ணெய் இருப்பு பெரியளவில் இல்லை. ஆனால் பல துறைகளில் அவர்கள் முதலீடு செய்துள்ளதால் அவர்கள் கரன்சியும் வலிமையாக உள்ளது.
பிரிட்டன்
ஐந்தாவது இடத்தில் வருவது ஜிப்ரால்டர் பவுண்டு.. ஜிப்ரால்டர் என்பத பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாகும். பிரிட்டன் பவுண்டு ஏற்ற இறக்கம் இதிலும் எதிரொலிக்கும் இதன் காரணமாகவே ஜிப்ரால்டர் பவுண்டு 5ம் இடத்தில் உள்ளது. அடுத்து 6வது இடத்தில் பிரிட்டன். அதன் வலிமையான பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் ஆகியவை பிரிட்டன் பவுண்டை வலிமையானதாக மாற்றுகிறது.
யூரோவும் டாலரும்
அடுத்தடுத்த இடங்களில் கேமன் தீவு டாலர் (இதுவும் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசம்), சுவிஸ் ஃபிராங்க் (உலகிலேயே வலிமையான வங்கி கட்டமைப்பு மற்றும் குறைந்த பணவீக்கம் இருக்கிறது) ஆகியவை வருகிறது. அடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயன்படுத்தும் யூரோ 9வது இடத்தில் வருகிறது. 10வடு இடத்தில் உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவின் டாலர் வருகிறது.
அதேநேரம் என்ன தான் யூரோவும் டாலரும் டாப் 10ல் கடைசி இரு இடங்களில் வந்தாலும் உலக நாடுகள் அந்நிய செலாவணியாகவும் சர்வதேச வர்த்தகத்திற்கும் இந்த கரன்சிக்களையே பயன்படுத்துகின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு யூரோவை பயன்படுத்துகின்றன. அமெரிக்க டாலரை பற்றிக் கேட்கவே வேண்டாம்.. அனைத்து நாடுகளுமே தங்கள் வர்த்தகத்திற்கு டாலரையே பயன்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications