இந்த சின்ன தப்பை செய்யாதீங்க.. இல்லனா குடும்பத்துக்கே பெரிய சிக்கல்! வல்லுநர் கொடுத்த வார்னிங்
சென்னை: மாறி வரும் வாழ்க்கை முறையில் இப்போது நமக்கு என்ன எப்போது நடக்கும் என்பதே தெளிவாகத் தெரியாத சூழல் இருக்கிறது. இதன் காரணமாக நாம் அனைவரும் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது கட்டாயமாகி இருக்கிறது. ஆனால், இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டும் போதாது.. சில சின்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்.. அப்படிச் செய்யவில்லை என்றால் அது பெரிய சிக்கலில் முடியலாம் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்!
கடந்த 20 ஆண்டுகளில் நமது வாழ்க்கை முறை மொத்தமாகவே மாறிவிட்டது எனச் சொல்லலாம். உணவு, லைஃப் ஸ்டைல் மாறி வருவதால் இப்போது யாருக்கு என்ன நடக்கும் என்பது குறித்துத் தெளிவில்லாத ஒரு சூழலே நிலவி வருகிறது. ஒரே ஒரு முறை மருத்துவமனையில் அட்மிட் ஆனால் கூட மொத்தச் சொத்தையும் இழக்கும் சூழலிலேயே மிடில் கிளாஸ் கூட இருக்கிறார்கள்.

இன்சூரன்ஸ் இருக்கா?
இதன் காரணமாகவே பலரும் இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். திடீரென ஏற்படும் எதிர்பாராத செலவுகள் அல்லது நிகழ்வு சமாளிக்க இந்த இன்சூரன்ஸ் உதவும். ஆனால், இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டும் பத்தாதாம். அதைத் தாண்டி சில விஷயங்களை நாம் செய்ய வேண்டுமாம். அந்தச் சின்ன சின்ன விஷயங்களைச் செய்யவில்லை என்றால் பெரிய சிக்கலே ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.
இதற்கிடையே இன்சூரன்ஸ் எடுத்த பிறகு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களைப் பிரபலப் பொருளாதார வல்லுநரான ராஜேஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மருத்துவக் காப்பீடாக இருந்தாலும் சரி, லைஃப் இன்சூரன்ஸாக இருந்தாலும் சரி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை அவர் முன்பே பகிர்ந்திருந்தார். இதை இப்போது அவர் ரீட்வீட் செய்திருக்கிறார்.
என்ன செய்ய வேண்டும்!
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "நீங்கள் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருப்பவரா? அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை:
- உங்களது வீட்டில், அனைவருக்கும் தெரிந்தவொரு பாதுகாப்பான இடத்தில் உங்களது அனைத்து பாலிசிகளையும் பிரிண்ட் செய்து வைக்க வேண்டும். அந்த இடம் நம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருத்தல் அவசியம்.
- உங்கள் குடும்பத்தாரிடமும், உங்களது மிக நெருங்கிய நண்பர்களிடமும் இன்சூரன்ஸ் பாலிசி copy ஒன்றை கொடுத்து வைத்தல் அவசியம்.
- உங்கள் குடும்பத்தினரிடம், உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் (உடல்நலக் குறைவு, இறப்பு) என்னென்ன செய்யவேண்டுமென்பதை தெளிவாக முன்னமே சொல்லி வைப்பது நலம்.
அவசர தேவைகள்
- எந்தெந்த நண்பர்களிடம் உங்களது தகவல்கள் உள்ளனவோ, அவர்களது தொலைப்பேசி எண்ணையும் குடும்பத்தாரிடம் கொடுத்து வைப்பது நல்லது. அவசரத் தேவைகளுக்கு அவர்களை அழைக்கலாம் என்பதையும் சொல்லி வைக்க வேண்டும்.
- உங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசியின் Do's & Dont's மற்றும் limitations (எந்தெந்த கண்டிஷனில் க்ளைம் கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்குமென்பதை தெளிவாக நாமும், நமது குடும்பத்தாரும், நமது நெருங்கிய நண்பர்களும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
- யாரை இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு நாமினியாக நியமிக்கிறீர்களோ, அவர்களுக்கு நாம் முக்கியமாகத் தெரியப்படுத்த வேண்டும். என்னென்ன சதவிகிதத்தில் நாமினிகளுக்கு கிடைக்குமென்பதையும் தெளிவு படுத்திவிட வேண்டுதல் மிகவும் அவசியம்.
கவனம்!
பொதுவாக, என்னிடம் இன்சூரன்ஸ் எடுக்கும் அனைவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய தொலைபேசி எண்ணைத் தெரிவிக்கச் சொல்லிவிடுவேன். சில மாதங்களுக்கு முன்னர் எனது client ஒருவர், மேற்கண்ட விஷயங்களை செய்யாததால் அவரது குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளானது. அவரது மனைவியார், அவர் கடைசியாக என்னை அழைத்ததை கண்டு எனக்கு போன் செய்ய, உடனடியாக பாலிசி காப்பி கொண்டு சென்று என்னால் உதவ முடிந்தது.
ஆகையால், சிரமம் பாராது, "இது என்ன சின்ன வேலைதானே" என்றோ, "இது கூட மனைவிக்கு/கணவனுக்குத் தெரியாதா?" என்றோ நினைக்க வேண்டாம். சின்னஞ்சிறிய விஷயங்கள் நாளை பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆகையால் கவனம்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications