ஐடி ஊழியர்களுக்கு முக்கிய டிப்ஸ் கொடுத்த Zoho ஸ்ரீதர் வேம்பு.. இதுதான் வெற்றிக்கான பார்முலா!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் டெக் சேவைகளை அளித்து வரும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஏஐ (Artificial Intelligence) காலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எப்படி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது குறித்து முக்கியமான அறிவுரையைப் பகிர்ந்துள்ளார். SAAS பிரிவில் தமிழ்நாட்டின் முன்னோடியாக ZOHO நிறுவனம் திகழ்கிறது.
சமீபத்தில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் வெளிப்படையாக ஏஐ காரணம் காட்டி ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வருகிறது. ஏஐ மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கிறது, ஏஐ இருப்பதால் இனி வரும் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான டெக் ஊழியர்கள் தேவைப்படாது என கூறி பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளது. இதில் முக்கியமாக Snap Inc, மெட்டா, ஆரக்கிள் போன்றவை மாபெரும் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்கள் திறமையை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஸ்ரீதர் வேம்பு விளக்கியுள்ளார்.
டொமைன் நாலெட்ஜ் தான் முக்கியம்
ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், "இன்றைய ஏஐ காலத்தில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயின் நீங்கள் மிகச் சிறந்த டொமைன் எக்ஸ்பெர்ட்டாக (domain expert) இருக்க வேண்டும்." புரோகிராமிங் திறன் அடிப்படை என்றாலும், வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து வாங்குவது நம்முடைய ஆழமான துறை சார்ந்த அறிவை தான். இதோடு நம்பகத்தன்மை, பாதுகாப்பு, ஆதரவு மற்றும் இணக்கத்தன்மை (compliance) ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏஐ மூலம் உற்பத்தித்திறன் (productivity) அதிகரிப்பதாக பலர் கூறினாலும், இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்று ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார். ஏஐ உதவியால் வேலை செய்யும் முன்மாதிரி (prototype) விரைவில் உருவாக்க முடிகிறது உண்மைதான். ஆனால் ஒரு முழுமையான தயாரிப்பை உருவாக்குவதில் பல கட்டங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஏஐ வேகப்படுத்த முடியாது. எனவே, தொழில்நுட்ப நிபுணர்கள் "புரோகிராமர் உற்பத்தித்திறன்" எனும் அளவீட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்துகிறார்.
ஏஐயைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்துகிறார். மென்பொருளில் உள்ள தேவையற்ற சிக்கல்கள் (needless complexity) பலவற்றை ஏஐ மூலம் எளிதாகக் குறைக்க முடியும். இந்த அணுகுமுறைதான் எதிர்காலத்தில் வெற்றியைத் தரும் என நம்புவதாக கூறி ஸ்ரீதர் வேம்பு தனது பதிவை முடிக்கிறார்.
இதேவேளையில் ஏஐ கோடிங் அனைத்து துறையை ஆட்கொண்டுவிட்டதால் தற்போது மனிதர்களுக்கு இருக்கும் பெரும் பலம் டிசைனிங். இதை அடிப்படையாக கொண்டு தான் ஒவ்வொரு ப்ராடெக்ட்-ம் வித்தியாசப்படும். டிசைனிங்கிலும் ஏஐ சேவை வந்தாலும் எப்படி ஏஐ உதவியுடன் திறம்படவும், வேகமாகவும், மக்களை ஈர்க்கும் வகையில் தனிப்பட்ட டிசைன் உருவாக்கப்படுகிறது என்பதில் தொடர்ந்து போட்டி இருக்கும்.
இத்தகைய டிசைனிங் மேம்படுவது மூலம் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மேம்பட்ட அனுபவத்தை கொடுக்க முடியும் என டெக் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இன்று பல இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பம் தங்கள் வேலையைப் பறித்துவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அறிவுரை மிக எளியது மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது மட்டும் அல்லாமல் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.












Click it and Unblock the Notifications