என்னய்யா பித்தலாட்டமா இருக்கு.. 156 கிராம் வெங்காயம் எங்கே.. பிக்பாஸ்கெட்டை அலறவிட்ட வாடிக்கையாளர்
சண்டிகர்: பிக்பாஸ்கெட் ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 1 கிலோ வெங்காயத்தில் 156 கிராம் குறைவாக டெலிவரி செய்யப்பட்டதால் புகார் தெரிவித்த நிலையில், அந்த நபருக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பிக்பாஸ்கெட் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கையே முடக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
உணவுப் பொருள்கள், காய்கறி முதல் வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள் வரை அனைத்துப் பொருள்களின் தேவையையும் பூர்த்தி செய்து, வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கின்றன ஆன்லைன் தளங்கள். என்னதான் ஒருபக்கம் இது பேருதவியாக இந்தாலும், இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்கள் சில சமயங்களில் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக தவறான பொருளை டெலிவரி செய்வது, தரமில்லாத பொருள்களை டெலிவரி செய்வது என சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்தான்.

அந்த வகையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், வாடிக்கையாளர் ஒருவர் 1 கிலோ வெங்காயம் ஆர்டர் செய்திருந்த நிலையில் அவருக்கு 844 கிராம் மட்டுமே டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர் புகார் தெரிவித்த நிலையில், பணத்தை திருப்பி அளித்துவிட்டு, அவரது அக்கவுண்ட்டையே முடக்கியுள்ள சம்பவம் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்தவர் பாவ்யே கோயல். இவர் ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிக்பேஸ்கெட்டில் 1 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வெங்காயம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு வந்த வெங்காயத்தின் அளவு 1 கிலோவுக்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாவ்யே அந்த வெங்காயத்தை எடை போட்டு பார்த்துள்ளார்.
அப்போதுதான், 1 கிலோவுக்கு வெங்காயத்துக்குப் பதிலாக 844 கிராம் வெங்காயம் டெலிவரி செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. 156 கிராம் வெங்காயத்தின் அளவை குறைத்து பிக்பேஸ்கெட் நிறுவனத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அந்த வாடிக்கையாளர் பிக்பேஸ்கெட்டிடம் புகார் அளித்தார். இதையடுத்து, பாவ்யேவின் பணம் திருப்பி செலுத்தப்பட்டது. ஆனாலும், பாவ்யேவின் பிக்பேஸ்கெட் கணக்கையே அவர்கள் முடக்கிவிட்டனர். இந்த சம்பவம் பாவ்யேவை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி நிலையில், பிக்பாஸ்கெட் நிறுவனம் செய்த செயல் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாவ்யே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 156 கிராம் குறைவாக அனுப்பப்பட்ட வெங்காயத்திற்கான பணத்தை பிக்பாஸ்கெட் நிறுவனத்தினர் திருப்பிச் செலுத்திவிட்டனர். ஆனால், என்னுடைய பிக்பாஸ்கெட் கணக்கையும் முடக்கிவிட்டனர். வாங்குகின்ற பொருள்களில் 1 கிராம் அதிகமாக இருந்தாலும் அட்டைப் பூச்சிகளைப் போல கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ்கெட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இருந்து பாவ்யேவுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்களுடைய குழுவினர் விரைவில் உங்களை அணுகி சிறப்பான முறையில் உங்களுக்கு உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவுக்கு பதிலளித்த பாவ்யே, உங்கள் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குழுவினரால் கடந்த மூன்று நாள்களாக நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்காமல் உள்ளனர். ஆனால், நீங்கள் இங்கு வெறும் வாய்வார்த்தையில் மட்டும் சேவை செய்கிறீர்கள் என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பதிவு எக்ஸ் தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலமாக தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். ஆன்லைனில் பழம், காய்கறிகளை ஆர்டர் செய்வதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது போன்ற பல்வேறு கருத்துகளைப் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications