வலிமையாக உள்ள பஞ்சாபில் தனித்துப் போட்டியிடுகிறதே காங்கிரஸ்-ஆம் ஆத்மி! பாஜகவுக்கு லாபமா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: லோக்சபா தேர்தலில் 5 மாநிலங்களில் கூட்டணி அமைத்துவிட்ட ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்தே எதிரும் புதிருமாக களம் காண்கின்றன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுவால் தமக்கு ஆதாயம் கிடைக்குமா? என இலவு காத்த கிளியாக பாஜக காத்திருக்கிறது.

லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே டெல்லி, குஜராத், கோவா, ஹரியானா மற்றும் சண்டிகரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Lok Sabha Election 2024: BJP to get benefit from AAP, Congress Solo contest in Punjab?

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி Vs காங்கிரஸ்: ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இரு கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இரு கட்சிகளிடையே சுமூகமான உடன்பாடு ஏற்படாத நிலையில் தனித்தே களம் காண இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

2019 லோக்சபா தேர்தல்: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலி தளம் 2, பாஜக 2, ஆம் ஆத்மி 1 இடத்தில் வென்றது.

2022 சட்டசபை தேர்தல்: ஆனால் 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்தன. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெறும் 20 இடங்களைப் பெற்றிருந்த ஆம் ஆத்மி இந்த முறை 92 இடங்களைக் கைப்பற்றி மிரட்டல் வெற்றியைப் பெற்றது. 2017 தேர்தலில் 77 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கோ வெறும் 18 இடங்கள்தான் கிடைத்தன. 2017-ல் 15 இடங்களில் வென்ற அகாலி தளம் கட்சிக்கு 3, பாஜக 2 இடங்கள் கிடைத்தன.

ஏன் கூட்டணி முறிவு?: 2019 லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றதால் காங்கிரஸ் இம்முறை அதிக தொகுதிகளை எதிர்பார்த்தது; ஆனால் ஆம் ஆத்மியோ 2022 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததாலும் தங்களது கட்சியே அமோக வெற்றியைப் பெற்றதாலும் குறைவான தொகுதிகளைத்தான் தர முடியும் என்றது. இதனாலேயே ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

அமரீந்தர்சிங்: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இருந்தார். ஆனால் பின்னர் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். 2022 சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கைகோர்த்தார். ஆனாலும் அமரீந்தர் சிங்கும் பாஜகவும் வெற்றி பெற முடியவில்லை. 2021-22-ல் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது.

ஆம் ஆத்மி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் களத்தில் பஞ்சாப்பின் 13 தொகுதிகளில் பிரதான் போட்டி என்பதே காங்கிரஸ்- பாஜக- அகாலி தளம் இடையேதான் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி வென்ற சங்ரூர் லோக்சபா தொகுதியில் 2014-ல் வென்ற பகவந்த் மான் மீண்டும் வென்றார். தற்போது முதல்வராக இருக்கிறார் பகவந்த் மான். இத்தொகுதிக்கு 2022-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி பெற்றார். அதாவது 2 முறை லோக்சபா தேர்தலில் வென்ற அதுவும் மாநிலத்தின் முதல்வர் வென்ற தொகுதியையே பறிகொடுத்தது ஆளும் கட்சியான ஆம் ஆத்மி. அத்தேர்தலில் வாக்கு சதவீத இடைவெளி என்பது 0.88%. அதாவது 6,245 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது.

பஞ்சாப் தேர்தலில் என்ன நடக்கும்?: 2019-ம் ஆண்டு தேர்தல் வாக்கு விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 2024 லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ஆம் ஆத்மிக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள்தான் கிடைக்கும் என சொல்லலாம். ஆனால் 2022 தேர்தலில் ஆம் ஆத்மி அபார வாக்குகள் பெற்றதின் அடிப்படையில் தற்போதைய லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும். விவசாயிகள் போராட்டம் இந்த முறையும் பாஜகவுக்கு பின்னடைவைத்தான் தரும். ஆகையால் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதள், பாஜக என்கிற வரிசையில்தான் வெற்றி இருக்கக் கூடிய சாத்தியம் உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.1

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+