இனி சொத்தும் வாங்க மாட்டேன்.. எந்த தொழிலும் செய்ய மாட்டேன்.. சபதம் போட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்
சண்டிகர்: தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல் சொத்து வாங்க மாட்டேன் என பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு போட்டி கொடுத்து வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. இதனால் பஞ்சாப்பில் பாஜகவுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று தான் தெரியவருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வாகி இருக்கிறார்.

சரண்ஜித் சிங் சன்னி
பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவிகிதம் மக்கள் தலித் பிரிவினர். அவர்களின் வாக்கு வங்கியை மொத்தமாக பெறவே, தலித் சீக்கியரை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி களமிறக்கியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. அம்மாநில மற்ற அரசியல் கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள்
சமீபத்தில் பஞ்சாப்பில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்வினை
இந்நிலையில், சரண்ஜித் சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று முதல் தமது பெயரிலும் தமது மனைவி பெயரிலும் எந்த வித சொத்தும் வாங்கப் போவதில்லை, எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்று சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் பிரசாரத்தின் போது தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications