ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஓடும் ரயிலிலிருந்து தள்ளி கொலை.. ஹரியானாவில் கொடூரம்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்த்து போராடியதையடுத்து அவர் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அப்பெண்ணின் குழந்தை மட்டும் ரயில் பெட்டியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் குற்றம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட பெண்கள் மீதான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இது தெரிய வந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களின்படி கடந்த 2020ம் ஆண்டை விடவும் 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. 2020 ஆம் ஆண்டில் 3,71,503 வழக்குகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலை
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விகிதம் (1 லட்சம் மக்கள்தொகைக்கு நடக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை) 2020ல் 56.5 சதவீதத்தில் இருந்து 2021ல் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி அறிக்கை காட்டுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ரயிலில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலையில் இருந்துள்ளார். இதை எதிர்த்து போராடியதையடுத்து அவர் ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு பயணம்
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பெண்மணி ரோஹ்தக்கில் இருந்து 145 கி.மீ தொலைவில் உள்ள தோஹானாவுக்கு ரயில் மூலம் சென்றுள்ளார். உடன் 9 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பயணத்தில் இவர்கள் இருந்த பெட்டியில் இவர்களுடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அந்த மூன்றாம் நபர் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

சம்பவத்தை விவரித்த குழந்தை
ஆனால் பெண் ஒத்துழைக்காததால் அப்பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து அந்த நபர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளியும் கீழே குதித்துள்ளார். பின்னர் ஒன்பது வயது குழந்தை மட்டும் அழுதுகொண்டே இருந்துள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து செல்ல ரயில் நிலையம் வந்த கணவருக்கு தனது மனைவி இல்லாதது அதிர்ச்சியளித்துள்ளது. இதனையடுத்து குழந்தையிடம் விசாரித்ததில் சம்பவத்தை குழந்தை விவரித்துள்ளது.

உடல் மீட்பு
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் காலையில் பெண்ணின் சடலத்தை மட்டுமே காவல்துறையால் மீட்க முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆளை தேடுகையில் அந்த நபர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில், "அவள் 20 கி.மீ. தொலைவில் இருந்தபோது மொபைலில் அழைத்தாள், அவளை அழைத்துச் செல்ல ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாள். இப்போது அவள் இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications