கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் டிரைவர்கள் செய்த மிஸ்டேக்... பரிதவித்த பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரைவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதால், மற்ற பஸ்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனால் பயணிகள் பஸ்ஸிற்குள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் சுமார் 8 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர் . இதனால், நேற்று சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்,கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்பட்டன. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டன.
கோயம்பேட்டில் தென்மாவட்ட மற்றும் மேற்கு மாவட்ட பேருந்துகள் நேற்று அதிக அளவில் இயக்கப்பட்டதால், மாலை 5 மணி முதலே பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்த சூழலில் திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் டிரைவர்கள் பலர் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கோயம்பேட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் தவித்தன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு கூடுதல் பேருந்துகள் புறப்படுவது குறித்து தகவல் தெரியாதால் தான் இப்படி நெரிசல் ஏற்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. அதன்பிறகே கோயம்பேட்டில் இருந்து ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்து சென்றன.
டிரைவர்களுக்கு அறிவிப்பு முறையாக சென்று சேர்ந்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று பயணிகள் தெரிவித்தனர்.
இன்று சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.












Click it and Unblock the Notifications