Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு இன்று (மார்ச் 14) தொடங்கும் சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயிலின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இந்தச் சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரங்கிமலை ரயில் நிலையம் இப்போது ஒரு 'மெகா' போக்குவரத்து மையமாக மாறுகிறது.

சென்னையில் பறக்கும் ரயில் சேவை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை, இன்று (மார்ச் 14) முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

17-Year Wait Ends Chennai Beach St Thomas Mount Elevated Train Service Starts

பறக்கும் ரயில் சேவையை திட்டமிட்ட போது, கடற்கரை முதல் மயிலாப்பூர், மயிலாப்பூர் முதல் வேளச்சேரி மற்றும் வேளச்சேரி முதல் பரங்கிமலை என 3 கட்டங்களாக திட்டமிட்டது. இதில் முதல் இரண்டு கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து பறக்கும் ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் நில ஆக்கிரப்பில் ஏற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தால், மூன்றாம் கட்ட பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணிகள் முடிவடைந்து சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பறக்கும் ரயில் சேவை தொடங்குகிறது. இதன்படி ஆணையர் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இன்று (மார்ச் 14) முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட இருக்கிறது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை இன்று தொடங்கப்பட இருப்பதால், பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்த இந்தப் போக்குவரத்து, தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் சென்னை மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த புதிய இணைப்பு மூலம் தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்திற்கு மாற்றுப் பாதை உருவாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் பயணிகள் நேரடியாக பரங்கிமலை வழியாக மற்ற புறநகர் பாதைகளுடன் இணைவதற்கு இது உதவும். போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 43 ஜோடி ரயில்களும், கடற்கரை முதல் வேளச்சேரி வரை 2 ஜோடி ரயில்களும், பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை 3 ஜோடி ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை புறநகர் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் ஒரு முக்கிய மைல் கல்லாக பறக்கும் ரயில் சேவைகள் நாளை (மார்ச் 14) முதல் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரப் பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த இணைப்புப் பாதையின் மூலம் இனி பரங்கிமலை ரயில் நிலையம் பறக்கும் ரயில் சேவைகளுக்கான முனையமாகச் செயல்படும். இது நகரின் தென்பகுதிகளில் ரயில் இணைப்பை வலுப்படுத்துவதுடன், மற்ற புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு பயணிகள் எளிதாக மாறிச் செல்வதற்கு வசதியாக அமையும்.

சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே 43 இணைப்பு ரயில்களும், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே 2 இணைப்பு ரயில்களும், வேளச்சேரி-பரங்கிமலை இடையே 3 இணைப்பு ரயில்களும் இயக்கப்படும்.

எனினும், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் நிற்காது. இந்த ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில்கள் நின்றுச் செல்வதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்ததும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை செல்லும் பறக்கும் ரயில்கள், சென்னை கோட்டை, சென்னை பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணியம்மன் கோவில், திருமயிலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி மற்றும் புழுதிவாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பரங்கிமலையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்கள், புழுதிவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கண்ணியம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை பூங்கா நகர் மற்றும் சென்னை கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பரங்கிமலை - வேளச்சேரி ரயில்கள், வேளச்சேரி - பரங்கிமலை ரயில்கள் புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் நிற்கும். இருப்பினும், இந்த ரயில்கள் ஆதம்பாக்கத்தில் நிற்காது; இந்த பறக்கும் ரயில் சேவைகள் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மாநகரப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து நாட்களுக்கும் பொருந்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட சென்னை பறக்கும் ரயில் சேவைக்கான (MRTS) கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பறக்கும் ரயில் விரிவாக்கத்தால் பரங்கிமலை ரயில் நிலையம் இப்போது ஒரு மெகா போக்குவரத்து மையமாக மாறுகிறது. இங்கே பறக்கும் ரயில், புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய மூன்று சேவைகளும் ஒரே இடத்தில் இணைவதால் பயணிகள் எளிதாக மாறிச் செல்ல முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+