இன்று தமிழ்த் தாத்தாவின் பிறந்தநாள் ! அழியும் நிலை ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கியவர் உ.வே.சாமிநாத ஐயர்!
சென்னை: தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 171ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து தெரிந்து கொள்வோம். தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பணிகளை தெரிந்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது.

உ.வே.சாமிநாத ஐயர்.. "உ.வே.சா" என அன்போடு அழைக்கப்பட்டவர். இவர் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் 1855 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கட்ராமன். இவரது தாய் சரஸ்வதி அம்மையார், இவரை செல்லமாக சாமிநாதன் என அழைத்ததால் அந்த பெயரே நிலைத்துவிட்டது.
இவர் தனது தந்தையிடம் இருந்து தமிழ் இலக்கியம் பயின்றார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த போதிலும் தமிழில் புலமைபெற ஊர் ஊராய் அலைந்து படித்தவர். 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஏட்டுச் சுவடிகளில் மட்டுமே இருந்தன. அவை அழியும் நிலையில் இருந்தன. அப்போதுதான் சீவகசிந்தாமணி என்ற இலக்கியத்தை புதுப்பித்துத் தருமாறு உவேசா-விடம் ஒருவர் கேட்டார்
அப்போது 7 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து 1887 ஆம் ஆண்டு முதல் முறையாக புத்தகமாக சீவகசிந்தாமணியை அச்சிட்டார். இதைத் தொடர்ந்து 12 சங்க இலக்கியங்கள், 9 புராணங்கள், 4 வெண்பாக்கள், இரு அந்தாதிகள், அங்கையற்கண்ணி மாலை, இரட்டைமணி மாலை போன்ற 90 வகையான ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் கொடுத்த பெருமைக்குாியவர். 3000- க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து பாதுகாத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபோது தமிழ்த் துறைக்கு புது மரியாதை தேடித் தந்தார். தனது உரைநடை, வாழ்க்கைச் சரிதம், சுயசரிதம் போன்ற படைப்புகளாலும் தமிழுக்கு பங்களித்தார்.
இவரது அயராத உழைப்பால் தமிழின் தொன்மையும் செழுமையும் உலகறியக் கிடைத்தது. மகாத்மா காந்தி உட்பட பலரும் இவரைப் போற்றினர். தமிழ் இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய இவரது தொண்டு என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
1880ம் ஆண்டு முதல் கும்பகோணம் கல்லூாியில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பிறகு 1903ல் சென்னை மாநிலக் கல்லூாியில் ஆசிாியர் பணி கிடைத்தது. 1942ம் ஆண்டில் மீனாட்சி தமிழ்க் கல்லூாியில் முதல்வர் பதவி வகித்தாா்.
இத்தனை தொண்டு செய்த உவேசா 28.04.1942- இல் காலமானார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டால் அவர் தமிழ்த்தாத்தா என்ற அழைக்கப்படுகிறார். அவரது பெயரால் தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் உவேசா நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications