சென்னை சென்ட்ரல் திணறுது! 18 ரயில்கள் ரத்தால் அலைமோதும் கூட்டம்! ரயிலில் ஏற முண்டியடிக்கும் பயணிகள்!
சென்னை: கவரப்பேட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்தால் தண்டவாளம் துண்டிக்கப்பட்டுள்ளது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. கிடைக்கும் ரயில்களில் ஏறி ஊருக்குச் செல்ல முயல்வதால், ரயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது திடீரென மோதியது.

இதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில், பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி,எஃப் போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் ரயில் மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மீண்டும் தர்பங்காவுக்கு மாற்று ரயில் மூலம் புறப்பட்டுள்ளனர். அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் சென்ட்ரல் - விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு ரயில் (வண்டி எண் 12077) இன்று காலை 7.25 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் இருந்து செல்லும் விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ஜன் சதாப்தி விரைவு ரயில் (வண்டி எண் 12078) இன்று பகல் 3.30 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் - ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12842) இன்று 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இயங்கும்.
பெங்களூரில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு புறப்பட்ட எஸ்எம்விடி பெங்களூரு - டானாப்பூர் சங்கமித்ரா விரைவு ரயில் (வண்டி எண் 12295), தர்மாவரம், காஸிபேட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. பங்காரப்பேட், குப்பம், கிருஷ்ணராஜபுரம், விஜயவாடா, வாராங்கல் காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம், கூடூர், நெல்லூர், பெரம்பூர், ஓங்கோல், ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கவரப்பேட்டையில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் கிடைக்கும் ரயில்களில் ஏறி ஊருக்குச் செல்ல முயல்வதால், ரயில்களில் முண்டியடித்து ஏறி வருகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் படிகள் வரை நின்றபடி பலர் பயணம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications