மக்களை தேடி மருத்துவம்.. 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்தனர்.. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனும் திட்டம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வரிசையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் முதன்முறையாக 'மக்களை தேடி மருத்துவம்' என்னும் மகத்தான திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. கிருஷ்ணகிரியில் கடந்த 5-ம் தேதி ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம்
நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் மக்களை தேடியே மருத்துவம் சென்று வருகிறது. அரசு மருத்துவமைனைக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை நேரடியாக வழங்கி வருகின்றனர்.

வீடுகளுக்கு சென்று மருந்து
இதுமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு அவர்கள் வீட்டிற்கே எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய போர்டபிள் டயாலிசஸ் கருவியை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உள்ளார்கள். இது தவிர புற்றுநோய், காசநோய், சிறுநீரக சிகிச்சை முடக்குவாதம், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு வீடுகளுக்கு தேடி மக்களை சந்தித்து அவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கப்பட உள்ளது.

மா.சுப்பிரமணியன் பேட்டி
முதற்கட்டமாக 20 லட்சம் பேர் என்றும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் என்றும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் துவக்கப்பட்டு 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளாதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கு ஆக்ஸிசன் 450 மெட்ரிக் டன் தேவையாக இருக்கிறது. ஆனால் 1000 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளது

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 34ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 1லட்சத்து 20ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டால் இந்தியாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிதான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொகுதியாகும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவுள்ள மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் அதிகப்படியாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

2 மாதத்திற்கு தேவையான மருந்துகள்
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் சிறப்பான ஒன்றாகும்.அத்திட்டத்தின் மூலமாக 38மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் 2 மாதத்திற்கு தேவையான மருந்துகளை 3722 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 5816 ரத்த அழுத்தத்திற்கான மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.2768 பேருக்கு இரண்டும் நோயிற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. 426பேருக்கு பலேட்டிவ்கேர் (நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்கள்) மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1 கோடி பேர் இலக்கு
454 பேருக்கு பிசியோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு தானாக டயாலிஸிஸ் செய்யும் உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13,247 பேர் இரண்டு நாட்களில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு இறுத்திக்குள் 1 கோடி பேர் பயனடைவார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications