“உங்க மேல யாராவது கை வச்சா அடுத்த 15 நிமிசத்துல 2000 பேர் வருவாங்க” - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேச்சு
சென்னை: சென்னையில் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், "தவெகவினரை யாரும் மிரட்டினால் அடுத்த 15 நிமிடங்களில் 2000 பேர் வருவார்கள். எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் நீங்கள் பயப்பட வேண்டாம்" என உறுதி அளித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் நிற்பார்கள் என்றும், 170-180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை வேலூரில் பேசிய விஜய் வெளியிட்டார். விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பலம் இருப்பதால், வரும் தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய தொகுதிகளில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சியின் இணை பொது செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், "ஆட்சிக்கு வந்தால் ஐந்தாயிரம் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஆட்சிகள் வந்தால் தானே இதை எல்லாம் அவர்களால் கொடுக்க முடியும். சென்னை திமுக கோட்டை என கூறி வருகின்றனர் ஆனால் இன்னும் 50, 60 நாட்களில் அந்த எண்ணம் உடைந்து போகும்.
இவ்வளவு நாள் உழைத்தது முக்கியமல்ல தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், அதுதான் முக்கியம். 234 தொகுதியிலும் தமிழக வெற்றி வெற்றிக் கழக வேட்பாளர்கள் நிற்பார்கள், அதில் 170லிருந்து 180 சட்டமன்ற தொகுதிகள் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களை யாராவது மிரட்டினாலோ, உங்கள் மீது யாராவது கை வைத்தாலோ அடுத்த 15 நிமிடங்களில், நம்முடைய கழகத்தினர் 2000 பேர் அங்கு வருவார்கள், எனவே நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் உங்களோடு இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்." என நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.












Click it and Unblock the Notifications