மீம் பேஜ் நடத்தியே.. 25 வயதில் ₹1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. எப்படி தெரியுமா? இதுதான் அந்த ரகசியம்
சென்னை: சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிப்பதற்காக மட்டுமே மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து, வெறும் 25 வயதில் ரூ.1.6 கோடி நிகர சொத்து மதிப்பை ஈட்டி அசத்தியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஒருவர்.
25 வயது இளைஞர் ஒருவர், ரெட்டிட் தளத்தில் தனது முதலீட்டு போர்ட்ஃபோலியோவை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அதில், ஆன்லைன் கன்டென்ட் உருவாக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் மீம் பக்கங்களை நிர்வகிக்கும் டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலமாகவே இந்த மாபெரும் நிதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதில் ஃப்ரீலான்சிங்... இன்று பல கோடி சொத்து
தனது 18-வது வயதில் பகுதிநேர ஆன்லைன் வேலைகள் மூலம் வருமானம் ஈட்டத் தொடங்கிய இவர், நாளடைவில் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை உணர்ந்து ஒரு முழுமையான டிஜிட்டல் மீடியா நிறுவனமாக அதை வளர்த்தெடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பல தீம் பேஜ்கள் மற்றும் மீம் பக்கங்களை வெற்றிகரமாக நடத்தி வருவதன் மூலம் கணிசமான வருவாயைப் பெற்று வருகிறார்.
வருமானம் அதிகரித்தாலும், நிதி மேலாண்மையிலும் முதலீட்டிலும் முறையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்ததே இவ்வளவு குறுகிய காலத்தில் 1.6 கோடி ரூபாய் சொத்தை உருவாக்கக் காரணம் என அவர் விவரித்துள்ளார்.
முதலீட்டு விவரங்கள் மற்றும் சொத்துப் பகிர்வு
தனது முதலீடுகளைப் பிரித்து வைத்திருக்கும் விதம் குறித்து அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார். இந்தியப் பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.90 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அவசரத் தேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் வாங்குவதற்காக வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.45 லட்சத்தை வைத்துள்ளார்.
ரியல் எஸ்டேட் பிரிவில் ரூ.15 லட்சமும், அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் ரூ.7.5 லட்சமும் முதலீடு செய்துள்ளார். மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.5 லட்சம் மற்றும் கிரிப்டோகரன்சி , நிலையான வைப்பு நிதி ஆகியவற்றில் இணைந்து ரூ.4 லட்சம் முதலீடு வைத்துள்ளார். தனிநபர் தேவைகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 லட்சத்தில் செகண்ட் ஹேண்ட் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இவ்வளவு பெரிய சொத்து வைத்திருந்தாலும், ரூ.50 லட்சத்துக்கான டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே எடுத்துள்ளதாகவும், தனக்கோ அல்லது தனது பெற்றோருக்கோ இன்னும் மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்பதையும் அவர் நேர்மையாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட முதலீடு என்ன?
தற்போது நிறுவனம் மூலம் தொடர் வருமானம் வந்தாலும், டிஜிட்டல் பிசினஸ் என்பதால் வருவாயில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் எனத் தெரிவித்துள்ள அந்த இளைஞர், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து இணைய பயனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
குறிப்பாக, வங்கியில் செயலற்றுக் கிடக்கும் ரூ.45 லட்சம் பணத்தை எங்கு மறுமுதலீடு செய்வது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது உள்ள சாதக பாதகங்கள் என்ன, சொத்துக்களைப் பல இடங்களில் முதலீடு மற்றும் குறைந்த வயதிலேயே ஓய்வுபெறும் இலக்கை நோக்கி எவ்வாறு நகர்வது என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குவியும் பாராட்டுகள்:
வெறும் பொழுதுபோக்கு தளமாகப் பார்க்கப்படும் சமூக ஊடகத்தை, பெரிய அளவில் வருமானம் ஈட்ட கூடிய இடமாக மாற்றி காட்டியுள்ள அந்த இளைஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 25 வயதில் இந்த அளவு தெளிவான முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்கியது மிகப்பெரிய சாதனை எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
அதேவேளையில், பெரும் தொகையைச் சேமிப்பில் வைத்திருப்பதை விட, நிலையான வாடகை வருமானம் தரும் வாடகை ரியல் எஸ்டேட் வணிகத்தில் இறங்குமாறும், உடனடியாக குடும்பத்திற்குப் போதுமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்குமாறும் நிதி ஆலோசகர்களும் இணைய பயனர்களும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
