3,184 பேர்.. தமிழக காவல்துறை, தீயணைப்பு வீரர்களுக்கு தமிழக அரசு பதக்கம்.. முதல்வர் ஸ்டாலின் ஆணை!
சென்னை: 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 3,184 பேருக்கு பதக்கம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்பு துறை என தனித்தனியே பிரித்து பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு மொத்தம் 3,184 பேருக்கு ‛தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காவல் துறையில் 3000 பேர்
வரும் பொங்கல் பண்டிகையையொட்டி காவல் துறையில் ஆண், பெண் என 2ம் நிலை காவல், ஒன்றாம் நிலை காவல், தலைமை காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் பணியாற்றி வரும் 3000 பணியாளர்களுக்கு ‛தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்'' வழங்கப்படும்.

தீயணைப்பு துறை
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்) எந்திர கம்மியர் ஒட்டி (சிறப்பு நிலை அலுவலர் (போக்குவரத்து)) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 118 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேருக்கு ‛தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்' வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும்.

ரொக்கத்தொகை வழங்கல்
மேலும் காவல் வானொலி பிரிவு, மோப்பநாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 நபர்கள் என மொத்தம் 6 பேருக்கு ‛தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணிப்பதக்கம்' வழங்கப்பட உள்ளது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்கத்தொகை வழங்கப்படும்.

பதக்கம் மற்றும் பதக்க சுருள்
இன்று தமிழக அரசு சார்பில் பதக்கங்கள் வழங்குவது பற்றி ஆணை வெளியிடப்பட்டுள்ளதால் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications