120 கேள்விகள் ரெடி.. அன்பில் மகேஸுக்கு எதிராக.. விஜய் போட்ட 'சக்ரவியூகம்'? அறிவாலயம் பகீர்!
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் 5 நாட்கள் காவல் கேட்ட நிலையில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புழல் சிறையிலிருந்து அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

420 கோடி ரூபாய் ஊழல்: 120 கேள்விகள் தயார்!
போலீஸ் காவலில் இருக்கும் 3 நாட்களில் அன்பில் மகேஸிடம் விசாரிப்பதற்காக, சுமார் ரூ.420 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான 120 கேள்விகள் கொண்ட பட்டியலை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் மிகத் தீவிரமாகத் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 120 கேள்விகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள், அன்பில் மகேஸை சுழற்றி அடிக்கக்கூடிய மற்றும் சட்டரீதியான முரண்பாடுகளை வெளிக்கொணரக்கூடிய "செக்-மேட்" கேள்விகளாக வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்:
விசாரணையின் போது கேட்கப்படும் ஒரு முக்கிய கேள்விக்குத் தொடர்புடைய துணைக் கேள்விகள் உடனடியாகக் கேட்கப்படாது. மாறாக, அடுத்தடுத்த தலைப்புகளில் 20 அல்லது 25 கேள்விகளைக் கேட்டுவிட்டு, இடையில் திடீரென முதல் கேள்விக்கான துணை வினாவை அதிகாரிகள் எழுப்புவார்கள்.
அப்போது அவர் ஆரம்பத்தில் அளித்த பதிலுக்கும், பின்னர் அளித்த பதிலுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை என்றால் சட்டரீதியாகச் சிக்கல் வராது. ஆனால், ஆரம்ப பதிலுக்கும் பிற்பகுதி பதிலுக்கும் இடையே சிறிய முரண்பாடு ஏற்பட்டாலும், அதனை உடனே எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவிலும் பதிவு செய்துகொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முரண்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் காட்டி, "முன்னாள் அமைச்சர் தொடர்ந்து முரண்பாடான தகவல்களைக் கூறி உண்மையை மறைக்கிறார்" என்று வாதிட்டு அவரது பிடியை மேலும் இறுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
பணம் யாருக்குப் போனது? உதயநிதி பெயரை நோக்கிய நகர்வா?
அன்பில் மகேஸிடம் நடத்தப்படும் இந்த 3 நாள் விசாரணையில், பள்ளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் யார்-யாருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது? எந்தெந்த முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் பங்கு சென்றது? என்பதைக் கண்டறிவதிலேயே காவல்துறை முழு முனைப்பு காட்டி வருகிறது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களின் பெயரை எப்படியாவது இந்த வாக்குமூலங்களில் இணைத்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே விசாரணைக் கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் அறிவாலயத் தரப்பில் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அன்பில் மகேஸ் சொல்லும் பதில்கள் அவருக்கும், கட்சிக்கும் எதிராகவே திரும்பக்கூடும் என்ற அச்சமும் திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவுகிறது.
வழக்கறிஞருக்கு அனுமதி: அறிவாலயத்திற்கு கிடைத்த சிறிய நிம்மதி!
காவல்துறையின் இந்த கிடுக்கிப்பிடி திட்டங்களுக்கு மத்தியில், திமுக தரப்பிற்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது.
அதாவது, 3 நாட்கள் நடக்கும் விசாரணையின் போது அன்பில் மகேஸின் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில் உடனிருக்கவும், தினமும் அவரை நேரில் சந்தித்துப் பேசவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அத்துடன், அவரது கணையப் பிரச்சனைக்குரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் உடனிருப்பது காவல் துறையின் ஒருதலைப்பட்ச அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் என்றாலும், 120 கேள்விகள் கொண்ட வியூகத்தை அன்பில் மகேஸ் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதும், இந்த 3 நாள் கஸ்டடி விசாரணை வழக்கைத் தேர்தல் அரசியலில் எந்தப் புயலுக்கு இட்டுச் செல்லப் போகிறது என்பதும் தமிழக அரசியலில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
