41%.. 3 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான் "மேலிடம்".. சைக்கிள் கேப்பில் தட்டி தூக்கும் திமுக
சென்னை அதிமுக உட்கட்சி பிரச்சனையால், பாஜகவுக்கு லாபமா? நஷ்டமா? என்று அரசியல் கணக்குகள் போடப்பட்டு வருகிறதே தவிர, இந்த விஷயத்தில் திமுக என்ன நினைக்கிறது என்பதுதான் முக்கிய அரசியல் முடிச்சாக பார்க்கப்படுகிறது.
டெல்லி மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக விவகாரத்தில் இதுவரை தலையிடவில்லை.. நீதிமன்றத்துக்கு செல்லும் முன்பேயே, இவர்களின் பஞ்சாயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை..
இருவரையும் அழைத்து பேசவில்லை.. சமாதானமும் செய்யவில்லை.. இரு தரப்புமே தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி வருகிறதே தவிர, யாருக்கும் வெளிப்படையாக ஆதரவும் தரவில்லை.. எதிர்ப்பும் காட்டவில்லை.. அமைதியாக நின்று ஒதுங்கி வேடிக்கை பார்த்து வருகிறது..
அதிமுக பொதுக்குழு-ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு வாதங்களையும் கேளுங்க-இபிஎஸ் கேவியட் மனு

ஆளுமை, மெஜாரிட்டி
அதேசமயம், ஓபிஎஸ்ஸை எந்த நிலையிலும் கைவிடாது என்பதும், அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், எடப்பாடியை, டெல்லி மேலிடம் கைவிட்டுவிட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.. எடப்பாடியின் ஆளுமை + மெஜாரிட்டி ஆதரவு + வலுவான தலைவர் இப்படி எதையுமே பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடி டீமின் தலையில் கொட்டி, தங்கள் கன்ட்ரோலில் இழுத்து பிடித்து வைக்கவே பாஜகவின் அரசியல் என்றும் சொல்கிறார்கள்.. ஒருவேளை இதற்கு எடப்பாடி டீம் ஒத்துவராத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, புது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கவும் மேலிடம் ரெடியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கணித்து சொல்கிறார்கள்.

டிடிவி சசிகலா ஓபிஎஸ்
டிடிவி தினகரன் + சசிகலா + ஓபிஎஸ் இவர்களை இணைத்துக் கொண்டு, கூட்டணி தலைமையேற்று, எம்பி தேர்தலை சந்திக்க நிறையவே வாய்ப்புள்ளதாம்.. அதிமுக விவகாரங்களில், இரட்டை இலையை முடக்கினாலும், தங்களுக்கு ஒருவகையில் அது நல்லது என்றுதான் பாஜக நினைக்கும்.. அத்துடன், தேர்தல் ஆணையம் தனித்துவமாக இயங்கக்கூடிய அமைப்பு என்றாலும்கூட, தன் அதிகாரத்தை லேசாக அங்கு பயன்படுத்தவும் மேலிடம் முயலக்கூடும் என்கிறார்கள்..

திமுக பிளான்??
அதனால், தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி பணிவாரா? தேர்தல் சீட் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தங்கள் தேவையை எடப்பாடி பூர்த்தி செய்வாரா? என்ற எதிர்பார்ப்புகள் பாஜக பக்கம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறதாம். ஆனால், எடப்பாடியின் நிலைமை அப்படி கிடையாது.. ஏராளமான வழக்கு விசாரணைகளில் பின்னி பிணைந்துள்ளது எடப்பாடி டீம்.. மாநிலத்தில் திமுக + மத்தியில் பாஜகவை வைத்து கொண்டு, இவைகளில் இருந்து வெளியே வருவது அவ்வளவு சுலபம் கிடையாது.. எனவே, பாஜக மேலிடத்தின் பாதுகாப்போடுதான், தன்னுடைய அரசியலை எடப்பாடியால் நடத்த முடியும் என்ற நிலைமை உள்ளது என்கிறார்கள்.

இலை + தலை
அதற்காக இரட்டை இலையை விட்டுவிடவும் முடியாது.. ஆதரவாளர்கள் பலம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த இலை இருந்தால்தான், தொண்டர்களிடம் அவருக்கான மவுசு கூடும்.. மேலும், 2024 எம்பி தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும்.. இந்த 3 விஷயத்திலும் டெல்லியை தான் எடப்பாடி பழனிசாமி மலையென நம்பி உள்ளார்.. அதனால், பாஜகவை எடப்பாடியால் பகைத்துக் கொள்ள முடியாது.. 5 வருட ஆட்சியில் இருந்தபோதுகூட, பாஜகவை அவர் கடுமையாக விமர்சிக்கவில்லை.. இந்த திமுக ஆட்சியில்கூட பாஜகவை அவர் விமர்சிக்கவில்லையே என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

வார்னிங்
ஆக, ஒன்றுபட்ட அதிமுகவை, தனக்கு அடங்கிய அதிமுகவைதான் பாஜக விரும்பும்.. அப்படி யாராவது மீறினால், சசிகலாவுக்கு 2017, பிப்ரவரியில் நடந்ததுதான் மீண்டும் இங்கு நடக்கும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் எச்சரித்து சொல்கிறார்கள். இப்படி அதிமுக விவகாரத்தில் பாஜக நிலைப்பாட்டினை, ஓரளவு கணிக்க முடிந்தாலும், திமுக இந்த விஷயத்தில் என்ன நினைக்கிறது என்பதையும் சற்று விரிவாக சிந்திக்க வேண்டி உள்ளது..

பிளஸ் POINT 1
திமுகவை பொறுத்தவரை, ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பவில்லை.. இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால், அதன்மூலம் வாக்குகள் பிரியும் என்று கலக்கம் அதிகமாகவே இருக்கிறது.. குறிப்பாக, சசிகலா + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிட்டால், திமுகவில் இருககும் முக்குலத்தோர் வாக்கு வங்கி அங்கு செல்ல நிறைய வாய்ப்புள்ளது.. எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு தனித்து இயங்கி வருவது திமுகவுக்கு ஆறுதலை தந்தாலும்கூட, நாளைக்கே பாஜக தலைவர்கள் இதில் தலையிட்டு, இரு அதிமுக தலைவர்களையும் அழைத்து பேசி, "சில பல கண்டிஷன்களை" விதித்தால், இவர்கள் ஒன்றுசேர்ந்துதான் செல்ல வேண்டிய சூழலும் ஏற்படலாம்..

பிளஸ் POINT 2
எனவே, அதற்கும் தயாராகவே திமுக இருப்பதாக தெரிகிறது.. அப்படி இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துவிட்டால், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கையை, அரசியல் பிரச்சனையாக எழுப்பவும் திமுக முயலலாம் என்கிறார்கள்.. அதாவது, இந்த அறிக்கையின் பிரச்சனையை வைத்தே, அதிமுகவுக்குள் கலகம் ஏற்படுத்தி, ஆட்டம் காண வைக்க திமுக பிளான் செய்யலாம்.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பலவீனமாகிவிட்டது.. அதாவது 41 வாக்கு சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்தை தற்போது அக்கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் இழந்துவிட்டது.. வெறும் 33தான் வாக்கு சதவீதம் உள்ளது..

பிளஸ் POINT 3
இழந்து போன அந்த வாக்கு சதவீதத்தில், 6 சதவீதம் சீமான் பிரித்துள்ளார்.. மிச்சம் 2 சதவீதத்தை டிடிவி பிரித்துள்ளார்.. இப்போது ஓபிஎஸ் டீம் தனியாக பிரிந்துள்ளதால், திமுகவுக்குதான் இது நன்மையை தரும்.. இதுவும் ஒருவகை அரசியல் கணக்குதான்.. அதனால்தான் ஒருபக்கம் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுக ஆதரவு என்பதுபோல மாயை காட்டி, எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை மூட்டி வருகிறது திமுக.. எப்படி பார்த்தாலும், எம்பி தேர்தல் வரை, அதிமுக வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்றும் சொல்லப்படுகிறது.. அந்தவகையிலும், இது திமுகவுக்கு பிளஸ் ஆகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

திமுக பிளஸ்
அதுமட்டுமல்ல, அதிமுகவில் ஏகப்பட்ட பிரச்சனைகள்ஓடிக் கொண்டிருப்பதால், அங்கு அதிருப்தியில் உள்ளவர்களை திமுக பக்கம் கொண்டு வரும் வேலையும் ஆரம்பமாகி உள்ளதாம்.. வழக்கம்போல் இந்த பணி, கொங்குவின் நம்பிக்கை நட்சத்திரம்தான் ஒப்படைக்கப்பட்டும் உள்ளதாம்.. சில முக்கிய நபர்கள் மீது வழக்குகள் பாய உள்ளதால், அவர்கள் எந்த பக்கம் போவது? பாஜகவா? திமுகவா? என்றும் குழம்பிப் போயுள்ளார்களாம்.. ஆக, அதிமுக பிளவினால், பாஜகவுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, திமுகவுக்கு அபரிமிதமான நன்மை காத்துகிடக்கிறதாம்.. பார்ப்போம்..!