வருது செக்.. வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்தால் 3 ஆண்டு ஜெயில்.. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா சட்டசபையில் நிறைவேறியுள்ளது.
வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதாவை நேற்று முன் தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து இந்த மசோதா நிறைவேறியது. அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வரப்பெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த சட்ட முன்வடிவின் பிரிவு இரண்டில் வரப்பெறும் வங்கிகள் என்ற வார்த்தை நீக்கப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்" கூறினார். இதையடுத்து இந்த திருத்தங்களுடன் மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவானது, கடன் வழங்கும் நிறுவனங்கள், செயலிகளுக்கு கட்டுப்பாடை விதிக்கும். கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாயமான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் படி கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் நிறுவன ஊழியர்களால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்தால், அந்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். கடன் வழங்கும் நிறுவன ஊழியர்கள் கடன் பெற்றவர்களையோ, அவர்களது குடும்பத்தினரையோ மிரட்டினாலோ, பின் தொடர்ந்தாலோ அந்த ஊழியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இதேபோன்று அந்த ஊழியருக்கு பிணையில் வெளி வரமுடியாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
இதே போன்று கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள், வெளியாட்களை பயன்படுத்தினாலோ, கடன் பெற்றவர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரின் பொருட்களை பறிமுதல் செய்தல், ஆவணங்களை எடுத்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்த மசோதாவின்படி கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனத்தினால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்தால், அந்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.












Click it and Unblock the Notifications