தமிழ்நாடு முழுக்க.. கட்டுமானத் தொழிலாளர்கள், தனியார் ஓட்டுநர்களுக்கு.. வருது ஸ்மார்ட் ID கார்டு! ஏன்
சென்னை: தமிழ்நாடு முழுக்க அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைக்க, முறையாக பட்டியலிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு சுமார் 30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, அதாவது கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பட்டறை ஊழியர்களுக்கு க்யூஆர் கோட் கொண்ட ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு செக்
மாநிலத்தில் மொத்தமாக சுமார் 85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 35 லட்சம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள். இந்தத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இரு சக்கர வாகன மானியம், குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், இலவச காப்பீடு போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் எஸ்.ஏ. ராமன், "தொழிலாளர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் காண்பிக்கக்கூடிய ஒரு அடிப்படை அடையாளம் தேவை. அரசுக்கும் சரியான நபர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் சீரான தரவுத்தளம் தேவை. ரேஷன் விவரங்களையும் இதன் மூலம் அணுகலாம். இந்தத் தரவுகள் அரசுடன் சேமிக்கப்படும், காலப்போக்கில் மேலும் பல நலத்திட்ட விவரங்களை இதில் சேர்ப்போம்" என்று ஊடகங்களிடம் கூறி உள்ளார்
இந்த அட்டைகள் ஆதார், வங்கி, தொழில், குடும்பம், வாரிசு விவரங்கள் மற்றும் பெறப்பட்ட நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தனி அடையாள அட்டையாகச் செயல்படும். தொழிலாளர் அலுவலகங்களில் உடனடி சரிபார்ப்புக்கு இது உதவும். இந்த அட்டைகளை விநியோகிக்க முகவரைத் தேர்வு செய்ய டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?
"இந்தத் திட்டத்தை முதல் கட்டமாகத் தொடங்கியுள்ளோம். இதன் நன்மைகளைப் பார்த்து மேலும் பலர் இணைவார்கள்" என்று ராமன் தெரிவித்தார். விபத்து காலங்களில் இந்த அடையாள அட்டை காப்பீட்டுப் பலன்களைப் பெற உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர். அருள் குமார், இந்த அடையாள அட்டைகள் வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார். "ஜார்ஜ் டவுன் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை. பணி விவரங்கள், ஊதியங்கள் மற்றும் பிற பலன்களுக்கு அரசு விதிகளை வகுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட ஆரிபீப்பிள், இந்த அடையாள அட்டைகள் தற்போது ஒரு அடிப்படை சான்றாகச் செயல்படும் நிலையில், பி.எஃப், இ.எஸ்.ஐ.சி, பணிக்கொடை போன்ற பலன்களை அரசு முறைப்படுத்த வேண்டும். சிறு அளவிலான கடன்களைப் பெற வங்கிகளுக்கு நம்பகமான ஆதாரமாக இந்த அடையாள அட்டை அமையும்" என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு ஆர்வம் காட்டுவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்களின் பணி தமிழ்நாட்டை மேம்படுத்துவதே, அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications