ஈசிஆர் விவகாரம்.. கைதான 4 பேரும் கல்லூரி மாணவர்கள்.. அரசியல் தொடர்பில்லை.. காவல்துறை விளக்கம்!
சென்னை: சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்தி இளைஞர்கள் அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது என்றும், உடனடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈசிஆரில் இளைஞர்களால் காரில் துரத்தப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்றிரவே தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஈசிஆர் வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து கார்த்திகேயன் பேசுகையில், ஈசிஆர் வழக்கில் மொத்தமாக 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 4 பேர் கைதாகி இருக்கும் நிலையில், 3 பேரை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பாலியல் துன்புறுத்தல் ரீதியாக இளைஞர்கள் துரத்தவில்லை என்று வரவில்லை. தற்போது, கைது நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையிலும் அப்படியான விஷயங்கள் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் இளைஞர்களின் காரினை இடித்ததாக கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
அந்த சம்பவம் நடந்த போது காரில் இருந்த இளைஞர்கள் குடிபோதையில் இல்லை. காரில் இருந்த கட்சிக் கொடிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. காரினை ஓட்டிய ஓட்டுநர் தான் கட்சிக்கொடியை பயன்படுத்தியுள்ளார். பார்க்கிங் மற்றும் சுங்கத்துறை கட்டணத்தில் இருந்து தப்பிக்கவும் கட்சிக் கொடியை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
7 இளைஞர்களில் 5 பேர் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். ஒரு இளைஞர் வெளி மாநிலத்திலும், மற்றொருவர் படித்து முடித்து வேலை செய்தும் வருகிறார்.இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையடிக்கும் முயற்சியும் நடக்கவில்லை.
அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பின்னர் உடனடியாக சிஎஸ்ஆர் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. அதேபோல் புகார் அளித்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் 10 நிமிடங்களில் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தில் 2 கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று தார் நிறுவன காரும், மற்றொன்று சஃபாரி நிறுவன காராகும். இந்த காரின் சொந்தக்காரர் அனிஷ் என்பவர் தான். ஆனால் அவரிடம் இருந்து சந்துரு வாங்கி பயன்படுத்தி கொண்டிருக்கிறார். 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. சந்துரு மீது கடத்தல் மற்றும் சீட்டிங் வழக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications