கிளாம்பாக்கத்தால் சென்னைவாசிகளுக்கு நடந்த பெரிய நல்ல விஷயம்.. நடக்க போகும் பெரிய மாற்றம்
சென்னை: சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவை தாண்டி ஒரு பெரிய நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதனால் கிளாம்பாக்கத்தால் இனி என்னென்ன நல்ல விஷயம் நடக்க போகிறது என்பதையும் பார்ப்போம்.
சென்னை அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போல் நெரிசல் ஏற்படாத வகையில், பேருந்துகளை எளிதாக நிறுத்தி, வெளியில் எடுத்து செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கும் மேற்கு மாவட்டத்திற்கும் செல்லும் அனைத்து அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்போது தான் கட்டி முடிக்கப்பட்டிருப்பதால் அங்கு சில அடிப்படை பிரச்சனைகள் எழுவது இயல்பு தான்..அந்த வகையில் உணவகங்கள், பேருந்துநிலையத்தை கடக்க நடைமேம்பாலம், புறநகர் ரயில் நிலையம் போன்ற வசதிகள் தேவை என்கிற நிலை உள்ளது.
அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் நல்லதும் நடந்திருக்கிறது. முன்பெல்லாம் அரசு பேருந்துகளோ, ஆம்னி பேருந்துகளோ, காலை நேரங்களில் தாமதமாக வந்தால் சென்னைக்குள் நுழைய மாட்டார்கள். நேராக வானகரம் பைப்பாஸ் பிடித்து கோயம்பேடு போய்விடுவார்கள். இதனால் பெருங்களத்தூரில் இறங்கும் மக்கள், அங்கிருந்து தாம்பரத்திற்கு போய் முதலில் இறங்க வேண்டும். அதன்பிறகே போக வேண்டிய இடங்களுக்கு இன்னொரு பேருந்தில் ஏறி போக முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர், தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இப்போது கிளாம்பாக்கம் வரை அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கிளாம்பாக்கத்தில் இறங்கிய உடன் எளிதாக டவுன் பஸ்களில் ஏறி, சென்னைக்குள் மயிலாப்பூர்,வடபழனி, பாரிஸ் கார்னர், தேனாம்பேட்டை, திருவான்மியூர், அடையாறு என எங்கு வேண்டுமானாலும் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்ல முடிகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையின் நிலப்பகுதியை கணக்கிடும் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. சென்னையின் வெளிவட்டசாலை, வானகரம் பைப்பாஸ் சாலை, காஞ்சிபுரம் சாலை, கேளம்பாக்கம் சாலை,செங்கல்பட்டு சாலை, தாம்பரம் சாலை என எல்லாமே சங்கமிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடசென்னை மக்கள் எளிதாக வெளிப்புற சாலை வழியாக வேகமாக கிளாம்பாக்கம் வர முடியும். இதேபோல் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் பகுதியில் உள்ளவர்கள் கேளம்பாக்கம் வழியாக எளிதாக கிளாம்பாக்கம் வர முடியும்.
கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் போது, நிச்சயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அப்போது கிளாம்பாக்கத்தை சுற்றிலும் கடைகள் வணிக நிறுவனங்கள் அதிகரிக்கும். சென்னை தற்போது பல கிலோ மீட்டர் தூரம் வளர்ந்துள்ளதால் அதனை வெளியில் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிறார்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்ததை வரவேற்போர். கிளாம்பாக்கத்தை சுற்றி இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படப்போவது உறுதி.












Click it and Unblock the Notifications