கிளம்பிருச்சிப்பா.. இனி அடை மழைதான்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா?
சென்னை: வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஒடிசா மாநிலத்தின் பல பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும், ஜூலை 24ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். ஒடிசாவின் பெரும்பாலான மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழையைப் பெற்றாலும், ஜூலை 24 ஆம் தேதி தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி (LoPAR) உருவாகும் என்று சனிக்கிழமை கணித்திருந்தது. புவனேஸ்வர் பிராந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக ஒடிசாவில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒடிசாவில் பருவமழையின் காரணமாக காற்றில் ஈரப்பதம் தொடர வாய்ப்புள்ளதாகவும், நெல் பயிர்களின் தற்போதைய விதைப்பு நடவடிக்கைகளுக்கு இது உதவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல், சில பகுதிகளில் கனமழை காரணமாக பாதிக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு ஆந்திரா அதனை ஒட்டியுள்ள தெற்கு ஒடிசா பகுதிகளில் குறைந்த காற்றழுத்தமானது உருவாக உள்ளது. இதன் காரணமாக வடமாநிலங்கள், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒடிஷா, கோவா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே குஜராத் அருகே கடல் பகுதிகளில ஒரு சுழற்சி நிலவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சுழற்சி நிலவி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ளது. ஏற்கனவே மேற்கு திசை கடலோர காற்று மீவிரமடைந்துள்ளது. கர்நாடகா மாநில கடலோர பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு திசை காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications