சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. திடீரென விழுந்து துடித்த பயணி.. சட்டென வந்த போலீஸ்.. அடுத்து அதிசயம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த நபருக்கு CPR உதவி அளித்து அவரை பாதுகாப்பு படை போலீசார் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மாரடைப்பு, மின்சாரம் தாக்கியதால் மயக்கம், நீரில் மூழ்கியதால் மயக்கம் உள்ளிட்ட நிலைகளில் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் மயக்கமடைந்தவர்களை எளிதாக அந்நிலையிலிருந்து நம்மால் மீட்டுவிட முடியும். அப்படியொரு அதிசய சம்பவம்தான் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

விமான நிலையத்தில் மயக்கம்
மேற்குவங்க மாநிலம் துர்காபூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் பயணி ஒருவர் வந்துள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மயக்கமடைந்த பயணியை படுக்க வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க தொடங்கினர். காவலர் ஒருவர், பயணிக்கு சிபிஆர் சிகிச்சையளித்தார்.

முதலுதவி
இதனையடுத்து பயணி கண் முழித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை செய்து பயணியை காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பலரும் பாதுகாப்புப் படை காவலரை பாராட்டி வருகின்றனர். இதுபோன்று மாரடைப்பு காரணமாக உடனடியாக சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யாருக்கெல்லாம்?
மட்டுமல்லாது, மின்சாரம் தாக்கியதால் மயக்கம், நீரில் மூழ்கியதால் மயக்கம் உள்ளிட்ட நிலைகளில் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு காவல்துறை டிஜபி சைலேந்திரபாபு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. Cardiopulmonary resuscitation எனப்படும் சிபிஆர் சிகிச்சை குறித்த போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளன.

எப்படி செய்வது?
சிபிஆர் செய்வது மிகவும் எளிது. இவ்வாறு மயக்கமடைந்த நபர் மூச்சு விடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக சிபிஆர் சிகிச்சையை தொடங்கிவிடலாம். மயக்கமடைந்த நபரின் தலையை மேல் நோக்கி வைத்து அவரது இதயத்தின் மேல் நம்முடைய கையை செங்குத்தாக வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு அழுத்தும்போது 18 வயது மேல் உள்ளவர்களுக்கு 5 செ.மீ வரை அவர்களது மார்புகளை நாம் அழுத்தலாம். மேலும் கைகால்கள் என அனைத்தும் நேராக இருப்பது கட்டாயம். இவ்வாறு இடைவிடாமல் 20 விநாடிக்குள் 30 முறை அழுத்த வேண்டும். இது அவர்களை உயிர்ப்பிக்க உதவும்.












Click it and Unblock the Notifications