என்ன நடக்குது சென்னையில்.. தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்ற கடைக்கு சீல்! 50 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாய்ப்பால் என்பது, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அமுத சுரபி. தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்ப்பால் என்பது சிசுக்களுக்கு மட்டுமே. தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்தக் கூடாது.

இந்நிலையில் தாய்ப்பாலை காசுக்கு விற்பனை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைனிலும் தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கஸ்தூரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்ப்பால் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அது தொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அண்மையில் அறிவித்தது.
மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருவதாக சமீப காலமாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இப்படியான உத்தரவை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடை மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications