நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித் மீது பரபரப்பு புகார்.. சென்னையில் ஷாக்
சென்னை: நடிகர் அஜித் வீட்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா.
கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மருத்துவமனைக்கு பிரபல நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை சந்திக்க நடிகர் அஜித் வந்துள்ளார்.
அப்போது மருத்துவரின் உதவியாளராக பணியாற்றிய பர்ஷானா ஆர்வ மிகுதியால் நடிகர் அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார்.

வேலை நீக்கம்
இதனை தொடர்ந்து அந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இது தொடர்பாக நடிகர் அஜித் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பர்ஷானாவை அப்போலோ நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பர்ஷானா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்..

அஜீத்தை சந்திக்க முடியவில்லை
இதன்பின்னர் தான் வீடியோ எடுத்தது தொடர்பாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பர்ஷானா, தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனாலும் அப்பல்லோ நிர்வாகம் அவரை வேலையில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பர்ஷானா மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு நடிகர் அஜித்தை கோரிக்கை வைக்க முடிவு செய்தார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அஜீத்தை அவரால் சந்திக்க முடியவில்லை.

தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் பர்ஷானா, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜுத் வீட்டுக்கு முன்பு வந்தார். இதனை தொடர்ந்து அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், பர்ஷானாவை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். எதுவாக இருந்தாலும் சட்டப்படி புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் அவரிடம் கூறினார்கள்.

அஜித்தான் காரணம்
அதற்கு பர்ஷானா, நடிகர் அஜித்தால் எனது வாழ்க்கையே பறிபோய் விட்டது. அவர் போட்ட மெயிலால்தான் எனது வேலை பறிபோனது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடிகர் அஜித்ததை பார்க்காமல் இங்கு இருந்து செல்ல மாட்டேன். நான் சாக முடிவெடுத்ததற்கு அவர் காரணம்'' என்று கூறினார். நடிகர் அஜுத் வீட்டு முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications