"கோடை காலம்" விரைவில் வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்.. ஆய்வுப் பணிகள் பற்றி அமைச்சர் நாசர் தகவல்!
சென்னை: கோடை காலம் வருவதால் ஆவின் நிறுவனம் சார்பாக கூல் டிரிங்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் கூல் டிரிங்ஸ் தயாரிப்பதற்கான ஆய்வு பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியை இலக்காக கொண்டு பயணப்பட்டு வருகிறது. அந்த வகையில் பால்வளத்துறை சார்பாக ஆவினில் அடுத்தடுத்த தயாரிப்புகள் உற்பத்தி செய்து வெளியிடப்பட்டு வருகிறது.
அண்மையில் ஆவினின் புதிய தயாரிப்புகளான பலாப்பழம் ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், குளிர்ந்த காபி, பட்டர் சிப்லெட்கள், பாசுண்டி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பதப்படுத்தப்பட்ட சீஸ், வேகவைத்த தயிர், ஆவின் பால் பிஸ்கட் மற்றும் ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவை தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அமைச்சர் நாசர் பேட்டி
இதன் மூலம் ஆவினின் மாதாந்திர வருமானம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். ஆவின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆவினில் அடுத்ததாக கூல் டிரிங்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நாசர் கூறுகையில், ஆவினில் வெளியிடப்பட்ட புதிய தயாரிப்புகள் அனைத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பால் முதல் 200க்கும் அதிகமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறோம்.

விளம்பரங்கள் எப்போது?
தீபாவளிக்கு வழக்கமாக இனிப்புகள் மற்றும் நெய் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது புதிய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொங்கல் பண்டிகைக்கான விற்பனை சராசரியாக உள்ளது என்று தெரிவித்தார். ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்வது குறித்து மேலிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு கிடைத்த பின், நிச்சயம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆவின் கூல் டிரிங்ஸ்
தொடர்ந்து, ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் முதமைச்சரின் ஒப்புதலுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், நிச்சயம் விரைந்து தண்ணீர் பாட்டில் விநியோகத்தை தொடங்குவோம். இனி வரும் காலங்களில் வெயில் அதிகமிருக்கும் என்பதால், ஐஸ் க்ரீம் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால், ஐஸ் க்ரீம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூல் டிரிங்ஸை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூல் டிரிங்ஸ் தயாரிப்புக்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஆவின் ஊழியர்கள்
பின்னர் ஆவின் ஊழியர்கள் பணிநீக்கம் பற்றிய கேள்விக்கு, ஆவினில் இருந்து 204 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்வதற்கு முன், தமிழ்நாடு அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. தற்போது 25 பேர் பணிநீக்கத்தை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து நிச்சயம் தமிழ்நாடு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications