கட்சி பேதம் மறந்து கை கொடுக்கும் சீமான்.. "தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது.." கமலுக்கு ஆதரவு
மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்ற பேசிய வார்த்தைகள் உண்மையிலும் உண்மை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தல் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்று பேசி இருந்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கர்நாடகாவில் எதிர்ப்பு
இதற்கு கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தென்னிந்திராவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாகவே இந்து மதத்தையும் மத உணர்வையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார். 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்துவதன் மூலமாக கன்னடத்தை அவமதித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதனால் கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசுகையில், கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை. கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அதனைப் பற்றி தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாக கூறி இருக்கிறார்.
சீமான் ஆதரவு
அதேபோல் வாட்டாள் நாகராஜ் போன்றோரும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சீமான் பேசுகையில், உண்மையை உணராத கூட்டமாக இருக்கிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து
1800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் இருந்து சமஸ்கிருதம் கலந்து பேசியதால், இங்கு பிளந்து பிரிந்த முதல் மொழி கன்னடம். 1,600களில் தெலுங்கு, 15ஆம் நூற்றாண்டில் மலையாளமும் பிறந்தது. கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், என் உதிரத்து உதித்த எழுத்தே என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இருந்தது. அதனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நீக்கிவிட்டார்.
கமல் பேசியது உண்மை
தமிழில் இருந்து உதித்த மொழிகள் தான் இவையெல்லாம். அந்த வரலாறு தெரிந்திருந்தால் எதிர்க்க மாட்டார்கள். கமல்ஹாசன் பேசியது உண்மையிலும் உண்மை. சத்தியத்திலும் சத்தியம். இது தெரியாமல் பேனரை கிழித்தால் கிழிக்கட்டும். அம்மண்ணில் உள்ள மொழியியல் ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று அறிஞர்களுக்கு தெரியும். இது தெரியாமல் செய்யும் பிழை தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications