எனக்கும் விஜய்க்கும்தான் பிரச்சினை... அம்மா ஷோபாவிடம் மனக்கசப்பு இல்லை - எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ
எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை உள்ளது உண்மைதான் நான் அதை மறுக்கவில்லை என்று அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். அதே நேரத்தில் விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மன கசப்பும் இல்லை என்றும் தெரிவித்துள
சென்னை: எனக்கும் விஜய்க்கும் இன்றைக்கு பிரச்சினை இருப்பது உண்மைதான் என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். அவரது அம்மா ஷோபாவிற்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் மனக்கசப்பும் இல்லை என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வார இதழ் ஒன்றில் வெளியான பேட்டியில் தான் சொல்லாத தகவல் வெளியாகி இருப்பதாகவும் கூறியுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், தானும் தனது மனைவியும் விஜய் வீட்டிற்கு வெளியே காரில் காத்திருந்ததாகவும், விஜய் தனது அம்மா ஷோபாவை மட்டுமே வீட்டிற்கு உள்ளே விஜய் அழைத்ததாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநராக இருந்த எஸ். ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். அவர் வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுப்பதற்கு முழு முதற்காரணம் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்தான்.
விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது வரை அனைத்திலும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருக்கு முழு பங்கு உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்
சினிமாவில் இருக்கும் மகனை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

விஜய் கோபம்
எஸ்.ஏ சந்திரசேகர் எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ, அன்று முதல் ஒரே குழப்பம்தான். தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் கூறியிருந்தார். அப்பாவிற்கு விசுவாசமாக இருந்த கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய். வீட்டு குடும்பச் சண்டை வீதிக்கு வந்ததால் பரபரப்பு அதிகரித்தது.

11 பேர் மீது வழக்கு
இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் இல்லை
அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார். வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் விளக்கம்
இந்த நிலையில் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய் உடன் பிரச்சினை இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுத்த ஒரு தமிழ் வார இதழ் தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

செய்தியில் உண்மையில்லை
அந்த பேட்டியில் நான் சொல்லாத ஒன்று இருந்தது. அதில் ஷோபாவும் நானும் விஜய்யின் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும்படி கூறப்பட்டோம் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொன்னார், அதன் காரணமாக நானும் ஷோபாவும் விஜயை சந்திக்காமல் திரும்பினோம் என கூறி இருப்பது உண்மை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இருக்கு ஆனா இல்லை
ஆம், எனக்கும் விஜய்க்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், விஜய் மற்றும் ஷோபா இடையே எந்த கசப்பும் இல்லை. இருவரும் அடிக்கடி பேசுவார்கள், சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று சந்திரசேகர் வீடியோவில் கூறி உள்ளார். அப்பாவுக்கும் மகனுக்கு பிரச்சினை இருப்பது உண்மைதான் என்று தனது வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications