நடிகர் விமல் கொடுத்த பணமோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது எப்ஐஆர்
சென்னை: நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. பல கோடி ரூபாயை பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி நடிகர் விமல் போலீசில் புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கி "மன்னர் வகையறா" என்ற படம் நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை வெளியிடும் போது சில பண ரீதியான பிரச்சினைகள் இருந்தது. இதன் காரணமாக இந்த படத்தை விமலின் A3v தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

படத்தை தயாரிப்பதற்காக நடிகர் விமல் பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோரிடம் பணம் வாங்கி இருந்தார். 3 கோடி ரூபாய் கடன் வாங்கி இந்த படம் தயாரிக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் பல கோடி ரூபாயை பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி நடிகர் விமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விமல் அளித்துள்ள புகாரில், "மன்னர் வகையறா" படத்தை பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து வந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகளில் ஆவணங்களிலும், கையெழுத்திட்டேன். படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானது என்றும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அந்த நான்கு கோடி ரூபாய் பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் என்னிட தெரிவித்தார்.

இதனால் மீதம் உள்ள அசல் 3 கோடி பணத்துக்காக பல படங்களில் நடித்து, அதில் வரும் சம்பளத்தை வைத்து கடனை கொடுத்தேன். ஆனால் இப்போதுதான் "மன்னர் வகையறா" படத்தின் உண்மையான வியாபாரம் 4 கோடி கிடையாது 8 கோடி ரூபாய் என்று தெரிய வந்தது. வெறும் 4 கோடி ரூபாய்க்குத்தான் வியாபாரம் செய்ததாக கூறி பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் என்னை ஏமாற்றிவிட்டனர். இவர்களுக்கு உடந்தையாக விக்னேஷ் என்ற நபரும் இருந்துள்ளார்.
என்னுடைய வங்கி காசோலையை வைத்து இன்னும் பல நிதி மோசடிகளையும் இவர்கள் செய்துள்ளனர் என்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விமல் புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து சிங்காரவேலன் , கோபி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் மீது 420- மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பே இவர்களுக்கு இடையில் பிரச்சனை இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விமல் மீது இரண்டே கால் கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டு பணத்தை திருப்பி தரவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications