"பெண்ணுக்கு அவமரியாதை.." வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்.. சென்னை டூ கன்னியாகுமரிக்கு நடைபயணம்
சென்னை: பாஜகவை கண்டித்து ஜனவரி 27ம் தேதி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், அக்கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், வார் ரூம் மூலம் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வகித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து "பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை" என்று கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக ஹனி டிராப் குறித்து ஊடகங்களில் பேசப்படுகிறது. இது பெண்களுக்கு மிக அபாயகரமான விஷயம் என்றும் குற்றம்சாட்டினார்.

காயத்ரி ரகுராம் நீக்கம்
இந்நிலையில் காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கி என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு.

மானபங்கம் செய்ததற்கு நன்றி
ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

காயத்ரி ரகுராம் நடைபயணம்
என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். விரைவில் களத்தில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாஜகவை கண்டித்து வரும் ஜனவரி 27 முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.

பயமில்லை
எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்குமானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications