வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய கஸ்தூரி! செல்போனும் 2 நாளாய் ஸ்விட்ச் ஆஃப்.. இப்போ எங்கே இருக்கிறார்?
சென்னை: சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுவதால் அங்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் காவல்துறையினர்.
தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான செயல்கள் நடைபெற்று வருவதாகவும், அவர்களை இழிவு படுத்தி பேசுவது, பூணூல் அறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது என புகார் கூறி சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், நடிகை கஸ்தூரி, நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி பேசிய பேச்சு தான் தற்போது பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. பிராமணர்களை சிலர் தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக பேசிய அவர், யார் தமிழர் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த தெலுங்கு பேசும் மக்கள் தமிழர்கள் என்றால் 3000 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த பிராமணர்களும் தமிழர்கள்தான் என பேசி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் பேசிய பேச்சு தான் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மன்னர் தனது அந்தப்புற மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசினார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும் போது எப்பவோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்க யார்? என்று பேசினார்.
இது தமிழகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி பேதம் இன்றி தெலுங்கு பேசும் மக்கள் ஒன்று திரண்டு கஸ்தூரிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதே நேரத்தில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் திமுக ஆதரவாளர்கள் தனது பேச்சை திருத்தி பரப்புவதாக கஸ்தூரி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். ஆனால் அவருக்கு எதிராக மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், நாயுடு மகாஜன சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்திலும், மதுரை- திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களிலும் கஸ்தூரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கஸ்தூரியை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் கொடுக்க சென்ற நிலையில், அவர் வீடு பூட்டி இருந்ததோடு. அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினமும் 10க்கும் மேற்பட்ட போஸ்ட்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வரும் கஸ்தூரி சமூக வலைதள பதிவுகளையும் போடவில்லை. ஃபோனை ஆன் செய்தால் ஜிபிஎஸ் மூலம் இடத்தை கண்டறிந்து விடுவார்களோ என்ற அடிப்படையில் அவர் செல்போனை ஆன் செய்யாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கஸ்தூரி ஹைதராபாத் சென்று வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அங்கு இருக்கலாம் எனவும் அல்லது ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கேரளாவுக்கு சென்றிருக்கிறாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருப்பதாக தகவல் பரப்பி விட்டு சென்னையிலேயே பதுங்கி இருக்கலாம் என்பதால் அவரது நண்பர்கள், உறவினர்கள், தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications