"எடப்பாடி வந்ததில் இருந்து.. அதிமுகவுக்கு எல்லாமே தோல்விதான்!" ஆவேசமான கேசி பழனிசாமி! நோட் பண்ணுங்க
அடுத்து மக்களவை தேர்தலுக்கு முன்பு தலைமை பிரச்சினை தீரும் என்று கேசி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேசி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். எடப்பாடி தரப்பைக் கடுமையாகச் சாடிய அவர், அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பு தலைமை பிரச்சினை தீரும் என்று தெரிவித்தார்.
அதிமுக இப்போது இரண்டு பிரிவுகளாக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இயங்கி வருவது அனைவருக்கும் தெரியும்.. இது தொடர்பாக அவர்கள் இரு தரப்பும் நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தொடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இது எடப்பாடி தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேசி பழனிசாமி
அதேநேரம் ஓபிஎஸ் அணி அடுத்தகட்ட திட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்டில் அவர்கள் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் எடப்பாடி தரப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவை வைத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளனர். இதனிடையே அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேசி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதிமுக
அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதிமுக தொண்டர்கள் இன்று எம்ஜிஆர் பக்கம் தான் இருக்கிறார்கள்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்பது சாதி, மதம் பாகுபாடு, லஞ்சம், ஊழல் பிரச்சினை இல்லாமல் இயங்கி வந்தது. இன்று அவைத் தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன் சாதாரண பஸ் நடத்துநராக இருந்து, அரசியலில் மெல்ல இந்த நிலைக்கு உயர்ந்தவர்.

மாற்றுச் சிந்தனை
ஆனால், இனிமேல் சாமானியராக இருந்தாலும் குறைந்தது 100 கோடி இருந்தால் தான் சட்டசபைக்கு வருவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். திராவிட சித்தாந்தமும் சிந்தனையும் இதுவல்ல.. திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.. இதன் காரணமாகவே மாற்றுச் சிந்தனையாளர்கள் வலுப்பெறும் அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்
தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்த கேள்விக்கு, "எடப்பாடியிடம் எல்லாம் இன்னும் முழுமையாகக் கட்சி செல்லவில்லை. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நிச்சயம் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைமை தான் அதிமுகவை அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வழிநடத்தும். எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார்.

நீதிமன்ற அவமதிப்பு
அதாவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்தை ஏற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவைக் கூட உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுக்குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் அதன் தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டதாக அவர்கள் சொல்கிறார்கள். அப்படியிருந்தால் எடப்பாடியின் மனுவிலேயே அவர்கள் உத்தரவிட்டிருக்கலாம். பொதுக்குழு தீர்மானம் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடியே செய்தது. எடப்பாடி தரப்பு சொல்வது நீதிமன்ற அவமதிப்பு போல இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்
சிவில் கோர்ட்டுக்கு போங்க.. அங்கு வழக்கு முடிய 25 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். நீதிபதிகளைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா.. இதற்கு முன்பும் பல நேரங்களில் ஒரு மாதம், மூன்று மாதங்களில் எல்லாம் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினையும் தலைமை பிரச்சினையும் முடிவுக்கு வரும். தொண்டர்களால் தேர்வாகும் தலைமை அதிமுகவில் உருவாகும். அந்த தலைமை அதிமுகவை வழிநடத்தும்.

எடப்பாடி மீது அட்டாக்
எடப்பாடி பழனிசாமி வந்ததில் இருந்து எத்தனை தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த போது, இந்த இயக்கம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. தொண்டர்கள் தேர்வு செய்யும் தலைமையுடன் நிச்சயம் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications