"டிடிவி தினகரன்- ஓபிஎஸ் சந்திப்பு.. எப்போது நடக்கும்?!" பற்ற வைத்த ஓ.பி.ரவீந்திரநாத்
சென்னை: ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்சி பூசல் தான் பேசுபொருளாக உள்ளது. ஒற்றை தலைமை என்று எழுந்த பூசல் இதுவரை ஓய்ந்தாக தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அதிமுக விவகாரம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பிடமே சாவியை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல கட்சி கணக்குகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருகிறது. நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் இரு தரப்பும் கலந்து கொண்டது.

தேர்தல் ஆணையம்
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து இந்தியா தேர்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியில் அதிமுக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் ராஜபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பி. ரவீந்திரநாத்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் தான். அவர் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அதிமுகவுக்குத் தமிழ்நாட்டில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர். விசுவாசமான அந்த தொண்டர்கள், எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் கட்சியை வலுப்படுத்த உழைத்து வருகின்றனர். இதுபோன்ற எளியவர்கள் தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும்.

நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்
அதிமுக தலைமை கழகம் இப்போது யாருக்குச் சொந்தம் எனத் தெளிவுபடுத்த முடியாத நிலையே உள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் சாவி எடப்பாடி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் செய்துள்ள மேல்முறையீடு, இன்னும் இரு வாரங்களில் விசாரணைக்கு வரும். தொண்டர்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில் நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

டிடிவி சந்திப்பு
அதிமுகவில் இப்போது மாவட்ட வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை டிடிவி தினகரன்- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறவில்லை. இது தொடர்பாக இதுவரை வெளியாகி வரும் தகவல்களில் உண்மை இல்லை. தொண்டர்களின் விருப்பத்தைப் பொறுத்தே டிடிவி தினகரன்- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இருக்கும்.

நாடாளுமன்றம்
தமிழ்நாட்டில் 40 லோக்சபா இடங்கள் உள்ள நிலையில், அதிமுக சார்பில் டெல்லியில் இருக்கும் ஒரே மக்களவை எம்பியாக நான் இருக்கிறேன். லோக்சபாவில் அதிமுக எம்பிக்கள் இல்லை என்று இல்லாமல் ஒரு எம்பி இருக்கும் கவுரமான நிலை இருக்கிறது. இதனால் தான் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி நான் அதிமுக எம்பியாக பணியாற்றி வருகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications