80 வருட சட்டப் போராட்டம்…தவியாய் தவித்த பாலமலை மக்கள்.. உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றுகாட்டிய ஸ்டாலின்…
சேலம்: கிட்டத்தட்ட 80 ஆண்டுகால சட்டச்சிக்கலை உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாகப் போராடி, வெற்றிக்கனியைப் பறித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதன் மூலம் பாலமலை மலைக்கிராம மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறி உள்ளது.

அது சரி, இந்த மலைக்கிராமம் எங்கே உள்ளது?
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது கொளத்தூர் ஊராட்சி. இதற்கு உட்பட்ட பகுதிதான் பாலமலை. இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள ஒரு அழகான மலைக்கிராமம். இங்கே மொத்தம் 33 குக்கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தக் கிராமத்திற்குத் தார்ச் சாலை வரவேண்டும் என்பது பல ஆண்டுகால கனவு. கரடுமுரடான இந்த மண் பாதையை யாராவது மாற்றி அமைத்திட மாட்டார்களா என அம்மக்கள் தவியாய்த் தவித்து வந்தனர்.

பாலமலை ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ், "இந்த மலையில் எங்கள் மக்கள் குடியேறி சுமார் 200 ஆண்டுகள் இருக்கும். இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் சாலை வசதி என்பதே இல்லாமல்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.
எவ்வளவு காலம் இப்படியே கஷ்டப்படுவது என்று பொறுக்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் மலைக்கிராம மக்களே தங்களின் சொந்த உழைப்பைச் செலவு செய்து நடந்து போகின்ற அளவுக்கு ஒரு மண் சாலை அமைத்தனர். அந்தச் சாலை வழியே நடந்து போகலாம். அதிகபட்சமாக இருசக்கர வாகனத்தில் செல்லலாம். அவ்வளவுதான் வசதி இருந்தது.

திடீர் என்று கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ வலி வந்தால் அவ்வளவுதான். மலைக்கிராமத்திலிருந்து அவர்களைக் கீழே கொண்டு செல்வதற்குள் பெரும்பாடுதான். அந்தளவுக்குச் சொல்ல முடியாத துயரத்தில் எங்கள் மலைக்கிராம மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.
காட்டு வயல் வேலைகளில் ஏதாவது பாம்பு கடித்து விட்டால், விஷக்கடி பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோவது பெரிய கஷ்டம். தொட்டில் கட்டித்தான் அந்த நபரை நாங்கள் தூக்கிச் செல்லவேண்டும்.

இது மண் ரோடு என்பதால், மழைக்காலங்களில் நடந்து போவதே பெரிய சாதனைதான். அந்தளவுக்குச் சேறும் சகதியுமாக மாறிவிடும் இந்த மண் ரோடு" என்று பழைய வேதனைகள் நிரம்பிய வாழ்க்கையை அப்படியே அசைப்போடு சொல்கிறார்.
இதே கிராமத்தில் வசிக்கும் ஜீவா, "நாங்கள் மலையைவிட்டு அடிவாரத்திற்குப் போகவே ஒருநாள் ஆகிவிடும். நடந்தேதான் போகவேண்டும். எந்தப் பேருந்து வசதியும் கிடையாது. அவ்வளவு ஏன் சாலை வசதியே இல்லை. அப்புறம் எப்படி பஸ் வரும்?" என்கிறார்.

கெம்மம்பட்டி ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது முதல் இங்கேதான் அவருக்குப் பணி. ஒரு இடைநிலை ஆசிரியை உட்பட இருவர்தான் இந்தப் பள்ளியில் பணி செய்கின்றனர்.
இப்பள்ளியில் சுமார் 40 குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றன. வேறு வேறு கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள். சரியான வாகன வசதி இல்லாததால், தலைமை ஆசிரியர் இங்கேயே தங்கிவிட்டதாகச் சொல்கிறார்.

காரணம், அடிக்கடி மலைக்கிராமத்திற்கு வரும் ஜீப் பழுதாகிவிடுகிறதாம். அதனால், பள்ளிக்கு வரும்போது பாதியிலேயே இறக்கிவிட்டு விடுகிறார்களாம். அந்தக் கஷ்டத்திற்காக அவர் இந்த மலைக்கிராமத்திற்கே வந்து குடியேறி இருக்கிறார்.
சாலை வசதி வசதிகள் இல்லாததால், இம்மலையில் இதுவரை சிறுதானியங்களை மட்டுமே பயிரிட்டு வந்துள்ளனர். பணப்பயிர்களைப் பயிரிட்டால் அதைச் சந்தைப்படுத்துவதற்காகக் கொண்டு செல்ல வேண்டும். அதற்குச் சாலை வேண்டும். சாலை இருந்தால்தான் வாகனங்களில் கொண்டு செல்ல முடியும். ஆகவே அதைத் தவிர்த்தே வந்துள்ளனர்.

இந்த மலையின் மண் வளத்திற்கு எல்லா வகையான பணப்பயிர்களையும் பயிரிட முடியும் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ். ஆனால், சாலை வசதி என்பது அதற்கு எல்லாம் பிரதானமாகத் தேவை. அதுவே எங்கள் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்தே வந்துள்ளது என்றும் அவர் வேதனைக் கொள்கிறார்.
இதே மலைக் கிராமவாசி சிவா, "சில ஆண்டுகள் முன்பாக திமுகவைச் சேர்ந்தவர்கள் கூட்டம் போட்டு ஆட்சிக்கு வந்தால் சாலை வசதி செய்து தருவதாகச் சொன்னார்கள். அதைப்போலவே இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மலைப்பாதையை புல்டவுசர் எல்லாம் வைத்து நோண்டி சாலை அமைத்து வருகிறார்கள்.
இப்போதைக்கு மண் சாலை வந்துவிட்டது. அதற்கு மேலாகத் தார்ச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இத்தனை வருடங்களாக எங்கள் கிராமத்தில் ஒரு பல்பொடிகூட வாங்க முடியாது. சோப்பு, எண்ணெய் வாங்கக்கூட அடிவாரத்தில் உள்ள ஊருக்குத்தான் போகவேண்டும். இங்குள்ள 6 ஆயிரம் மக்களின் நிலைமையும் இதுவரை இப்படித்தான், இந்த ரோடு வேலை தொடங்கிய பிறகுதான் உண்மையில் வாழ்வதற்கான நம்பிக்கையே பிறந்துள்ளது" என்கிறார்
ஏன் இந்தக் கிராமத்திற்கு இத்தனை வருடங்களாகச் சாலை வசதி இல்லை? அதற்கான காரணம் என்ன என்பதை விளக்கினார் மிதுன் சக்கரவர்த்தி. "திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மலைக்கிராமத்திற்குச் சாலை அமைத்துத் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன் அடிப்படையில் இப்போது சொன்னதைச் செய்து கொடுக்கும் பணியில் உள்ளோம். இந்த மலைக்கு இத்தனை ஆண்டுகாலமாகச் சாலை அமைப்பதில் சில சட்டச்சிக்கல்கள் இருந்து வந்தன. பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் உச்சநீதிமன்ற ஒரு வழங்கு நடைபெற்று வந்தது.
இந்தக் கிராமத்திற்குச் சாலை அமைப்பதற்கு இடையூறாகக் கிட்டத்தட்ட 940 மரங்கள் இருந்தன. 1996 ஆம் ஆண்டு பொதுநல வழக்காக இதைப் போட்டு இருந்தார்கள். அதை அகற்றாமல் சாலை அமைக்கமுடியாத நிலை நீடித்தது.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அமைச்சர் கே.என். நேருவின் ஆலோசனையின் அடைப்பிடையில், டி.எம். செல்வகணபதி என்னை அழைத்து ஒரு பொதுநல வழக்கை என் பெயரில் தொடுக்கச் சொன்னார். அதன் பின்னால், எனது பெயரில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தோம். அந்த வழக்கு கடந்த 5 மாதங்களாக நடைபெற்றுவந்தது. வனத்துறைக்கு உச்சநீதிமன்றம் முறையான ஒரு ஆணையை வழங்கினார்கள்.

இங்குள்ள மரங்களை அகற்றுவதற்கும் சாலை அமைப்பதற்குமான ஒரு சிறப்பான தீர்ப்பை நாங்கள் பெற்றோம். அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் சாலைவசதி அமைப்பதற்கான ஆணையைப் பிறப்பித்து, நிதியை அளித்தார். ஏறக்குறை இரண்டரைக் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது இந்தக் கிராமத்திற்கு ரோடு வசதி வந்துவிட்டது. சுமார் 80 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றி இது. இந்தப் பாலமலை மக்கள் இன்றைக்குப் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய கரணம் முதலமைச்சர் ஸ்டாலின்" என்கிறார் இந்த இளைஞர்.
இது சாலைக்கான சாதனை அல்ல; ஒரு சரித்திர சாதனை!












Click it and Unblock the Notifications