உச்சநீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் புதுதிட்டம்.. ஈரோடு கிழக்கு வேட்பாளர் தேர்வுக்கு மாற்றுவழி! என்னவாம்?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் பொதுக்குழு கூட்ட போதிய காலஅவகாசம் இல்லாத நிலையில் வேட்பாளர் தேர்வு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புதிய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும் வேட்பாளரை தேர்வு செய்து திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த நிலையில் பொதுக்குழு மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் தனி அணியாக உள்ளனர்.
ஜூலை 11 பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணி தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீதான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அதில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவித்தது. இதையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடியாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவில் என்ன உள்ளது?
அதன்படி 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவில் செல்லாது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பொதுக்குழு மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேகமாக செயல்படுத்தி வருகிறது. வேட்புமனுத்தாக்கலுக்கு 7 ம் தேதி கடைசி என்பதால் எடப்பாடி பழனிச்சாமி புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளது.

சுற்றறிக்கை அனுப்ப..
அதன்படி இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என முடிவு செய்ய பொதுக்குழுவை கூட்டாமல் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை மாற்றுவழியில் பெற முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. அதாவது சில தினங்கள் மட்டுமே உள்ளதால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுவது கடினம் என்ற நிலையில் இந்த முடிவினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், அதன்மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும் வேட்பாளரை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமைக்குள்..
மேலும் இவ்வாறு கிடைக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வரும் திங்கட்கிழமை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2000க்கும் அதிகமானவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளரே அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications