அண்ணா பிறந்தநாள்: புழல் சிறையில் 40 கைதிகள் விடுதலை.. நல்லெண்ண அடிப்படையில் விடுவித்த தமிழக அரசு!
சென்னை: 75வது சுதந்திர தினம் மற்றும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பிற மத்திய சிறைகளில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் தமிழக சிறைகளில் நீண்டகாலம் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பட்டியல் தயாரிப்பு
இதற்கிடையே 75வது சுதந்திர தின நிறைவையொட்டி நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில்நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து நன்னடத்தையுடன் இருப்பவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

9 மத்திய சிறைகளில் விடுதலை
இந்த பட்டியலை சிறைத்துறை டிஜிபி, சிறைத்துறை தலைமையிட டிஐஜி உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. அதன்பிறகு முன்விடுதலை செய்வதற்கான கைதிகளின் பட்டியல் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

புழல் சிறையில் 40 கைதிகள் விடுதலை
இதன் ஒருபகுதியாக நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் இருந்தும் நல்லெண்ண அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கோவை, பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட மத்திய சிறைகளில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

வேலூர் சிறையில் விடுதலை
சிறைகளில் இருந்து கைதிகள் ஒவ்வொரு கட்டங்களாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது. இதில் வேலூர் ஜெயிலில் இருந்து முதல் கட்டமாக 5 பேர், 2வது கட்டமாக 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications