தமிழ்மகன் உசேனுக்கு என்ன ஆச்சு? “வதந்தி பரப்புவது வேதனைக்குரியது” அதிமுக தலைமை விளக்கம்!
சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்மகன் உசேனின் உடல்நிலை குறித்து பொய் செய்திகள் பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது என அதிமுக தெரிவித்துள்ளது.
அதிமுக அவைத்தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் தமிழ்மகன் உசேன். எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியது முதல் அக்கட்சியில் இருந்து வரும் தமிழ்மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022ல் ஓபிஎஸ் - எடப்பாடி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட சமயத்தில் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழ்மகன் உசேன் உடல்நிலை தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் தமிழ்மகன் உசேன் உடல்நிலை குறித்து பரவி வருவது தவறான தகவல் என அதிமுக தலைமைக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "அதிமுக அவைத்தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த தவறான செய்தியை, வதந்தியை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஒரு மூத்த அரசியல் தலைவரின் உடல்நிலை குறித்து, துளியும் அரசியல் நாகரிகம் இன்றி, விஷமத்தனமாக இப்படிப்பட்ட பொய் செய்திகளைப் பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications