மயிலாப்பூரில் கூட நிற்க முடியும்.. தொகுதி மாறுகிறாரா ஜெயக்குமார்? எமோஷனலாக வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: இன்னும் 10 முறை சட்டசபைத் தேர்தலில் நின்றாலும், ராயபுரம் தொகுதியில் தான் போட்டிப் போடுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஜெயக்குமார் முனைப்பு காட்டி வந்த சூழலில், தற்போது ராயபுரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி இருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் முகமாக இருந்து வந்தவர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முக்கிய பங்காற்றிய ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்து வந்தார். ஆனால் கடந்த தேர்தலில் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார், சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஜெயக்குமார் தோல்விக்கு என்ன காரணம்?
திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி சுமார் 65 ஆயிரம் வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை பெற்றார். இதனால் ஜெயக்குமாரால் சட்டசபைக்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஜெயக்குமாரின் தோல்விக்கு பாஜக உடன் அமைக்கப்பட்ட கூட்டணியே காரணம் என்று அவரே விமர்சித்திருந்தார். ராயபுரம் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவிற்கு வசித்து வருகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதி
அவர்கள் பெருமளவில் திமுக பக்கம் சாய்ந்ததே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இம்முறையும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் பெயரளவிற்கு கூட ஒரு இஸ்லாமிய கட்சியும் இணையவில்லை. அத்தனை தரப்பும் திமுக கூட்டணி பக்கமே ஆதரவாக இருக்கிறது. இதனால் ஜெயக்குமார் மயிலாப்பூர் தொகுதிக்கு மாற முடிவு செய்ததாக சொல்லப்பட்டது.
ஜெயக்குமார் அறிவிப்பு
கடந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கான வாக்கு வித்தியாசம் 12 ஆயிரமாக மட்டுமே இருந்தது. தற்போது பாஜக உடனிருப்பதால், மயிலாப்பூர் தொகுதியில் எளிதாக வெல்ல முடியும் என்று கணக்கிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஜெயக்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.
ராயபுரம் தொகுதி
அதில் ஜெயக்குமார், 2001ல் இருந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த நீங்கள், 2021ல் கைவிட்டுவிட்டீர்களே.. நான் அப்படி என்ன தப்பு செய்தேன்? கட்டப் பஞ்சாயத்து செய்தேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா? அப்படி இருந்தால் அரசியலை விட்டு போய்விடுகிறேன். உங்களை சுத்தி சுத்தி வந்தேனே.. இன்னும் 10 தேர்தலில் நிற்பேன்.. அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன்.
ஜெயக்குமார் எமோஷனல்
நான் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லைனா.. சென்னையில் வேறு ஏதாவது தொகுதியில் கூட நிற்கலாம். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் அது ராயபுரம் தான் என்று தெரிவித்தார். இதனால் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications