வடசென்னை கதை தான்.. எடப்பாடி + ஓபிஎஸ் + டிடிவி + செங்கோட்டையன்.. இவங்களா ஒன்னா இணைக்கிறது பாஜக!
சென்னை: அதிமுகவில் அணிகள் உருவாவதும் மீண்டும் இணைவதும் சகஜமாக விட்ட நிலையில் ஐந்தாவது அணியாக செங்கோட்டையன் வெளியேறி இருக்கிறார். ஆனால் அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக, எடப்பாடியாக இருந்தாலும், ஓபிஎஸ் ஆக இருந்தாலும், தற்போது செங்கோட்டையனாக இருந்தாலும் நாடுவது என்னவோ பாஜகவை தான்.
2026 தேர்தலை ஒட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. திமுகவை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகள் அவ்வப்போது சலசலப்புகளை எழுப்பினாலும் அதனை சமாளித்து விடுகிறது திமுக தலைமை.
உட்கட்சியை பொறுத்தவரை மோதல், பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக தான் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது. குறிப்பாக ஜெயலலிதா இருந்தவரை எந்தவித பிரச்சனைக்கும் ஆட்படாத அதிமுக அவரது மறைவுக்கு பின் பிரச்சனைகளை சந்திக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு மாறிவிட்டது.

அதிமுக பிளவு
ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, அவருக்கு நிழலாக இருந்த டிடிவி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலாவால் முதல்வராகப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தான் அவரை வெளியேற்றுவார் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு சசிகலாவால் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை காப்பாற்றினார். இடையில் டிடிவி தினகரன், தன் பங்குக்கு சில எம்எல்ஏக்களுடன் அதிமுகவில் இருந்து பிரிந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி
நாட்கள் செல்ல செல்ல ஓபிஎஸ்ஐ ஓரம் கட்ட தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. வேறு வழியின்றி அவரும் வெளியேற்றப்பட, அதிமுகவில் ஏற்கனவே கேசி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வந்தாலும், அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக சசிகலா, எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோர்தான் இருக்கின்றனர். இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் ஒரு அணி உருவாகி இருக்கிறது.
செங்கோட்டையன்
அதுதான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்ற பெயரோடு கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி இருக்கிறார். இதனால் அதிமுகவில் பலம் வாய்ந்த ஐந்தாவது அணி உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஐந்து அணிக்கும் பொதுவான விஷயம் என்றால் அது பாஜக தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக திட்டம் போட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். அதற்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய நிலையில் இருவரையும் சேர்த்து வைத்தது பாஜக.
பாஜக
தொடர்ந்து அதிமுகவின் அனைத்து விவகாரங்களிலும் பாஜகவின் தலையீடு இருந்ததை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஓபிஎஸ் தனி அமைப்பை ஏற்படுத்தியதற்கும், பாஜக கூட்டணியில் இணைந்ததற்கும் மோடி தான் காரணம் என பேசி இருந்தார். அமித்ஷாவை சந்தித்து பேசுவதையும் ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பாஜக இணைப்பு
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வந்திருப்பதாக தான் கூறினார். ஆனால் கார்கள் மாறி மாறி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இடையில் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டு அமித் ஷாவை சந்திக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் செங்கோட்டையன் ஹரித்துவார் சென்று ராமரை தரிசிக்கிறேன் என சொல்லிவிட்டு அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அமித்ஷா
அதிமுக விவகாரங்கள் தொடர்பாகவே அமித்ஷாவிடம் செங்கோட்டையன் பேசினார் என்கின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆனாலும், வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆனாலும் பாஜக தயவை தான் நாடி வருகின்றனர். ஒரே கட்சியில் எவ்வளவு பிரச்சனைக்கும் ஒட்டுமொத்த இணைப்பு புள்ளியாக பாஜக இருக்கிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், எடப்பாடி ஆகியோரில் யாருக்கு பாஜக ஆதரவு தரப்போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications