பாதி மிரட்டியாச்சு..மீதி முடக்கியாச்சு! என்னயவே மிரட்டி பாத்தாங்களே..திடீரென சீனுக்குள் வந்த டி.ஜெ.!
சென்னை: ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொய் வழக்கு போடுவது ஸ்டாலினுக்கு ஒன்றும் புதிதல்ல.. தன் மீது எத்தனையோ பொய் வழக்குகள் போட்டு அச்சுறுத்த எண்ணியது திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெலிக்ஸ் ஜெரால்டு: சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதனையடுத்தே அவர் மீதான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜெயக்குமார்: இந்நிலையில் ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பொய் வழக்கு போடுவது ஸ்டாலினுக்கு ஒன்றும் புதிதல்ல! என் மீது எத்தனையோ பொய் வழக்குகள் போட்டு என்னை அச்சுறுத்த எண்ணியது இந்த விடியா திமுக அரசு! வெளியே வந்து இன்னும் கூடுதலாக தான் இந்த அரசை எதிர்த்து வருகிறேன். தற்போது ஊடக ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது.
ஊடக அச்சம்: இது எந்த அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது. சாட்டை துரைமுருகன்,மாரிதாஸ்,அருள்மொழிவர்மன்,சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் எங்கள் அரசின் நிர்வாகத்தின் மீது எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தனர். அதை சரி செய்யவே எங்கள் அரசு முற்பட்டதே தவிர அவர்களை முடக்கவோ அடிக்கவோ எண்ணவில்லை!

நியாயமற்ற நிலை: இன்று பெலிக்ஸ் போன்றோருக்கு ஏற்பட்டுள்ள இந்த நியாயமற்ற நிலை நாளை நான் மேற்கோள் காட்டியுள்ள தனி மனித பத்திரிக்கையாளர்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது! பாதி ஊடகங்களை உண்மையை போட கூடாது என மிரட்டி விட்டனர். மீதி ஊடகங்களையும் மிரட்டி பணிய வைக்க முயற்சி எடுத்துள்ளார் சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின். பழிவாங்குவதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் எதுவும் செய்ய பாசிச முதல்வருக்கு நேரமில்லை போல. விரைவில் யூடியூப் நிறுவனத்தின் மீதும் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடத்தினாலும் நடத்துவார்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
