இனி ராஜபாளையம் வேண்டாம்.. மீண்டும் சிவகாசி தொகுதிக்கு திரும்பும் ராஜேந்திர பாலாஜி.. என்ன நடந்தது?
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே தொடங்கி இருக்கும் சூழலில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களின் தேர்தல் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இம்முறை தனது பழைய தொகுதிக்கு மாறுவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதற்கேற்ப சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததில் இருந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டத்தின் அதிமுகவின் முகமாக ராஜேந்திர பாலாஜி மாறிய நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதிமுக உட்கட்சி மோதல்
அதற்கு முன்பாக ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் தான் போட்டியிட்டு வந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக நிர்வாகி ராதாகிருஷ்ணனுடன் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். அவர் சார்ந்த சமூக வாக்குகளை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திருப்பினார்.
தொகுதி மாறிய ராஜேந்திர பாலாஜி
ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். இதற்காக திமுகவும் அவருக்கு ஆதரவாக நின்றது. இதனை அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவியை கொடுத்த சிவகாசி தொகுதியை கைவிட்டு, ராஜபாளையத்திற்கு தாவினார்.
ஜோதிட நம்பிக்கை
இந்த தொகுதிக்கு மாறியதற்கு பின் அவரின் ஜோதிட நம்பிக்கையும் காரணமாக சொல்லப்பட்டது. அந்த நேரத்தில் ராஜேந்திர பாலாஜி மஞ்சள் உடையில் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் ராஜபாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருந்ததோடு, நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வந்தார்.
இபிஎஸ் முன் ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தால் மீண்டும் சிவகாசி தொகுதியிலேயே போட்டியிட தயார் என்று கூறி இருக்கிறார். அதற்கேற்ப சிவகாசி தொகுதியில் பழையபடி விளையாட்டு போட்டிகளை நடத்துவது, நலத்திட்ட உதவிகள் செய்வது என்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சவால் கொடுக்கும் திமுக
அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்த ராதாகிருஷ்ணன் காலமாகிவிட்டார். இதனால் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சிவகாசி தொகுதிக்கு திரும்புவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனாலும் சிவகாசி தொகுதி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் இருப்பதால், மீண்டும் சிவகாசி தொகுதியில் வெல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications