ஓபிஎஸ்-யிடம் தீர்மான வரைவு ஒப்படைப்பு.. பொதுக்குழு ஏற்பாடுகள் தயார்.. தீ வேகத்தில் எடப்பாடி டீம்!
சென்னை : அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதிமுக தீர்மான குழுவினர் தயாரித்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர்.
பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரி வரும் நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் வரைவு தீர்மானத்தை ஓ.பி.எஸ்ஸிடம் கொடுத்துள்ளனர்.

நாளை பொதுக்குழு
ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தீர்மானங்கள் தயாரிக்கும் குழுவின் கூட்டம், கடந்த 18ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் கடிதம்
இதற்கிடையே பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய அஜெண்டா கிடைக்கப்பெறவில்லை என பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும், கூட்டத்திற்கான அஜெண்டாவை நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியம் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிப்பதாலும் பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கடிதம், பொதுக்குழு தடை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்மானக்குழு
இந்நிலையில், நேற்று மீண்டும் தீர்மானக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டன. நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. யார் தீர்மானங்களை முன்மொழிவது, வழிமொழிவது என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

23 தீர்மானங்கள்
அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெற்றுள்ளன. இதுபோல மொத்தம் 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் இந்த 23 தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, ஒற்றைத் தலைமை குறித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைப்பு
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீர்மான குழுவினர் தயாரித்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். மேலும், கட்சியின் வரவு, செலவு கணக்குகளும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications