Exclusive: சசிகலா காலில் எடப்பாடி விழவே இல்லை.. என்ன நடந்தது தெரியுமா! புது விளக்கம் தரும் பொன்னையன்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த பொன்னையன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவில் பல வாரங்களாகவே உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழு தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி தரப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் தரப்பு முன்வைத்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தன்னை நம்பி வந்த அனைவருக்கும் துரோகம் செய்துவிட்டதாகச் சாடி வருகின்றனர். சசிகலா தயவால் தான் எடப்பாடி முதல்வரானார் என்றும் இருப்பினும், அவருக்கே எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பொன்னையன்
இந்தச் சூழலில் ஒன் இந்தியாவுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த பொன்னையன், "ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா தான் காரணம். இதை நான் சொல்லவில்லை. பல்வேறு அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் முன் வைக்கிறார்கள். இது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் எங்களுக்கு முன்னால் தெரியாது. இதனால்தான் கட்சிக்குத் தலைமை ஏற்று நடத்த சசிகலாவை அழைத்து இருந்தோம்.

சசிகலா
நானே கூட சசிகலா தலைமை தாங்க வேண்டும் என அழைத்தேன் அதெல்லாம் உண்மைதான். ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடக்க நடக்கவே பல உண்மைகள் எங்களுக்கு தெரியவந்தது. அவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது. இதன் காரணமாகவே தொண்டர்களும் பொதுக்குழுவும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும் போது நானே நினைத்தாலும் சசிகலாவைக் கட்சியில் இணைக்க முடியாது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த முடிவை எடுத்தனர். அதன் பின்னரே அதிமுக பொதுக்குழுவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் யார் முதல்வர் என்ற கேள்வி வந்த போது எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் பன்னீர்செல்வத்திடம் அந்த அளவுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை.

கூவத்தூர் சம்பவம்
நேரம் செல்ல செல்ல எடப்பாடியின் ஆதரவு எம் எல் ஏக்கள் 90 ஆனது. சசிகலா முதலில் வேறு ஒரு நபரை முதல்வராகக் கொண்டு வர வேண்டும் என்றே நினைத்தார். ஆனால் அவர்களின் எண்ணம் நடக்கவில்லை. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள்.

காலில் விழுந்தாரா
எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் மட்டும் இல்லை.. தன்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்த அத்தனை எம்எல்ஏக்கள் காலிலும் விழுந்தார். அந்த வீடியோவில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்திருக்கும் அத்தனை எம்எல்ஏக்களும் இருந்தால் அவர்கள் முன்னால் தான் எடப்பாடி பழனிசாமி விழுந்தார். சசிகலாவைச் சுற்றி இருந்தவர்கள் எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி அப்படிச் செய்தார். தன்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்த அனைத்து எம்எல்ஏக்கள் இடமும் ஆசீர்வாதம் வாங்கியதாகவே எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications