சசிகலா குறித்து எதுவும் பேசாத அதிமுக மா.செ.க்கள் கூட்டம்... தேர்தல் தோல்வி குறித்து காரசார விவாதம்!
சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலாவின் ஆடியோ அரசியல் குறித்து எவருமே பேசவில்லையாம். மேலும் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது; உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே காரசமாக விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே பரபரப்பு ஏற்பட்டது.

கேபி முனுசாமி மவுனம்
இந்த கூட்டத்தில் சசிகலா விவகாரம் குறித்து நீண்ட விவாதம் இருக்கலாம் மாநில நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இக்கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட சசிகலா பற்றி யாருமே பேசவில்லையாம். கூட்டத்தில் முதல் நிகழ்வாக எல்லோரையும் வரவேற்று பேசினார் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. பொதுவாக, அதிமுக ஆலோசனை கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக கே.பி. முனுசாமிதான் ஆரம்பித்து வைப்பார். அவர் கூட சசிகலா குறித்து எதுவுமே பேசவில்லையாம்.

ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவு
அதேபோல் சசிகலாவுக்கு எதிராக மிக கடுமையாக, ஆவேசமாக பேசிவரும் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகமும் கூட எதுவும் பேசவில்லையாம். இந்த கூட்டத்தில் சசிகலா பற்றியும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும் யாரும் பேசக் கூடாது என முன்னரே என்று ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கண்டிப்பாக நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டனராம். அதனால் தான் சசிகலா, கூட்டணி கட்சிகள் குறித்த பேச்சு எதுவும் பேசப்படவில்லையாம்.

ஓபிஎஸ் கருத்து
இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவைகளை பற்றி உங்கள் கருத்தை சுதந்திரமாக பேசலாம் என்று அழைத்தார். ஆனால் அதிமுகவின் சீனியர்கள் யாரும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஒன்றிரண்டு சீனியர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி ஜெயித்து விட்டது திமுக. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். இதனை மக்கள் முன் கொண்டு செல்ல போராட்டங்கள் நடத்தலாம் என்றும் சிலர் ஆலோசனை தெரிவித்தனர்.

திமுக அரசு போராட்டம்
ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே, கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றுங்கள் என முதலில் சொல்லுவோம். அதை நிறைவேற்றாத நிலையில் திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தலாம் என்றனர். இதையெல்லாம் குறித்துக்கொண்டே இருந்தார் துணை ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான வைத்தியலிங்கம். இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் பெரிய தோல்வியை அடைந்துட்டோம் என யாரும் நினைக்காதீர்கள். நமக்கும் திமுகவுக்கும் வெறும் 3 சதவீதம். அதுவும் பல இடங்களில் 500, 600, 1000 ஓட்டுகளில் வெற்றியை இழந்திருக்கிறோம். இது பெரிய தோல்வி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் இதை நாம் சரி செய்திட முடியும் என்றார்.

சுற்று பயணம்
இருந்த போதும் சில கட்சி நிர்வாகிகள், தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். நீங்கள் இருவரும் இணைந்து சுற்றுப்பயணம் செய்யுங்கள் ; ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் போட்டு பேசுங்கள் ; உண்மையிலேயே தோல்விக்கு காரணமானவர்கள் இருந்தால் அங்கேயே அவர்களை அழைத்து கண்டியுங்கள்; உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி விவாதியுங்கள் என்றனர். மாவட்டம் தோறும் கூட்டம் நடத்துவதற்கு பதில் ஜெயலலிதா பாணியில் தலைமையகத்துக்கு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து விவாதிக்கலாம். இந்த கொரோனா காலத்தில் அதுதான் சரியானது என்று சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்.

மண்டல மாநாடுகள்
அப்போது, மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து இதுபற்றி விவாதிக்கலாம் என்றாராம் எடப்பாடி. மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களிலேயே ஒரு பொதுக் கூட்டத்தை போட்டு அதிமுகவின் வலிமையை ஜெயலலிதா காட்டுவார்கள். அதேபோல, தமிழகத்தை 5 மண்டலமாக பிரித்து 5 மண்டல மாநாடுகளை நடத்தலாம் என்று தான் யோசித்தோம். ஆனா, ஆட்சியில் நாம் இருந்த போது கொரோனாவை சுட்டிக்காட்டி மாநாடு பொதுக்கூட்டம் போட தடை விதித்தோம். இப்போ நாமே அதே போல செய்தால் விமர்சனம் வரும் என்று நினைத்து கொரோனா நெருக்கடிகள் முடியட்டும். அதன் பிறகு அத்தகைய மாநாடுகளை நடத்தலாம் என நினைக்கிறோம் என்றார்.

அதிமுக பொன்விழா
செப்டம்பர் 15 ந்தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு வருவதால் அதை எப்படி சிறப்பாக நடத்துவது எனவும் இந்த கூட்டத்தில் விவாதித்திருக்கின்றனர். அப்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சினிமா எடுத்து அன்றைய நாளில் வெளியிட முடியுமா ? என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும், காமராஜரின் வாழ்க்கை வரலாறு எப்படி சினிமாவாக வந்ததோ அதே போல தலைவரின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்க வேண்டும். நிச்சயம் எடுப்போம். ஆனா, அதை பொன்விழா ஆண்டில் ரிலீஸ் செய்ய முடியுமா என்று தெரியவில்லை என்றனர். மேலும் அதிமுக கூட்டணி தொடர்கிறது. அதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் வருகிற போது விவாதிப்போம். எந்த இடத்திலும் அதிமுகவில் ஆளுமை செலுத்த தோழமைக் கட்சிகளை அனுமதிக்க மாட்டோம். அதில் கவனமாக இருப்போம். அதுவரை யாரும் தோழமைக் கட்சிகளை விமர்சிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் பேசியவைகளை வைத்து எழுதப்பட்ட தீர்மானத்தை வாசித்தார் வைத்தியலிங்கம்.












Click it and Unblock the Notifications