அதிமுக கையில் எடுத்த திமுகவின் பழைய வியூகம்.. என்ன நடக்கும்.. சக்சஸ் ஆகுமா?
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது திமுக கடைபிடித்த வெளிநடப்பு உள்ளிட்ட சில பிளான்களை கையிலெடுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக தலைமைச் செயலக கூட்டரங்கில் நடத்தப்படாமல் கலைவாணர் அரங்கில் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டம் தொடங்கியது.

2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்
இதன்படி இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் தொடங்கியது ஆளுநர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பேரவைத் தலைவர் அப்பாவும் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து 10 மணிக்கு தனது உரையை ஆளுநர் வாசிக்கத் தொடங்கினார். அந்த உரையில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து தகவல்கள் இடம் பெற்று இருந்தது. அந்த உரையில் ஸ்டாலின் குறித்தும் ஏராளமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆலோசனை
இந்த நிலையில் கூட்டத்திற்கு முன்னதாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை எதிர்கொள்வது, என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுப்பது, ஆளுநர் உரை மீதான நிலைப்பாடு ஆகியன குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரச்சினைகள் எழுப்ப முடிவு
கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து விவகாரம், மழை பாதிப்பு நிவாரணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டுகள் குறித்து கேள்வி எழுப்பி தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய அதிமுகவினர் முடிவு செய்திருப்பதாகவும், குறிப்பாக அம்மா உணவகம் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து திமுகவுக்கு கடும் அழுத்தங்களை கொடுக்க முடிவெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக வெளிநடப்பு
மேலும் முக்கிய நடவடிக்கைகளின் போது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக செய்ததைப் போன்றே வெளிநடப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கூறியது போலவே முதல் நாள் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையை அதிமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற நடவடிக்கைகள் வரும் கூட்டத் தொடரிலும் அதிமுக சார்பில் கடைபிடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன












Click it and Unblock the Notifications